பக்கம்:அவள்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபூர்வ ராகம் 327

எப்பொழுதும் தயாராயிருக்கவேண்டும். கடவுளிடத்திலே கணக்குச் சரியாய் ஒப்பித்தாக வேண்டும். இதெல்லாம் அம்மாவின் கொள்கை. இங்கிருக்கையிலேயே மறு உலகின் சிந்தைதான் அவளுக்கு. ஆகையால், நான் போக வேண்டும். ஆனால் என் காரணங்களே வேறு என்று புள்ளி போட்டிருந்த இடங்களெல்லாம் பார்க்க அம்மாவுக்குத்தான் வாய்ப்பு முதலில் கிட்டிவிட்டது. தென்னாடெல்லாம் சுற்றிய பிறகு காசி, கயா, பிரயாகை வரை போய் வருவதாகத் திட்டம். அம்மா எங்களைத் தனியாய் விட்டுச் சென்றதே விபத்தாய் முடிந்தது. மிருகங்களாகிய எங்களைக் கட்டியாள யாருமில்லை.

மழை, அந்த சமயம்போல்-ஆனால் எப்போது பெய்தாலும் அப்படித்தான் சொல்கிறோம்-எப்போதும் பெய்ததில்லை. தெருவில் வெள்ளம் முழங்காலாழத்திற்கு ஒடியவண்ணமிருந்தது. இரண்டு வாரங்களாக சூரியனைக் கண்டவரேயில்லை பகலிலும் இருள் கனத்துத்தேங்கிற்று. மழை விடாது பெய்துகொண்டிருந்தது. வீட்டிற்குள் அடைந்து கிடந்தோம்-கூட்டிலடைத்ததுபோல், மாடிக்கும் கீழுக்குமாய் அலைந்து வெதும்பினோம்.

பதினைந்தாம் நாளிரவு ஏதோ விளக்கண்டை உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தோம். ஜன்னலும், கதவுகளும் படார் படார் என்று மோதிக்கொண்டன. புயல், மரங்களினூடே பாய்ந்து ஊளையிட்டது.

புத்தகத்தை அலுப்புடன் 'டப்' என்று மூடிவிட்டு, 'வெளியே போவோமா?' என்றாள்.

"எங்கே போகிறது? சினிமா கினிமா எல்லாம் மழைக்குப் பயந்து மூடித் தொலைத்திருக்கிறானே!"

'கடற்கரைக்குப் போவோம்” என்றாள்.

'போவோம்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/371&oldid=1497918" இலிருந்து மீள்விக்கப்பட்டது