பக்கம்:அவள்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

392 லா. ச. ராமாமிருதம்

"ஒருவழியா என்னைப் பிடிச்ச கறுப்பு படிப்படியா அடங்கி, எளுந்திருச்சுப் பார்த்தால் வேளை தெரியாது. தள்ளாடிப் போய் தாளைத் திறந்து பார்த்தால் வாசல்லே கட்டி விட்டிருக்கும் பையிலே நாலு நாள் பால் உறையிலே புளிச்சுககிட்டுக் கிடக்கும்.”

முறுவலிக்க முயன்றாள் முடியவில்லை.

"ஆனால் வரவர இந்த பிளாக் மூட் சமாளிக்கறதாயில்லே. அந்த அலறல் சத்தம் அர்ஜென்ட் ஆயிட்டுது. நேத்து ரொம்ப மோசம். பத்து வருடமா இங்கே நான் வல்லே நேற்றுத்தான் வந்தேன், இந்த அலையுள் நடந்து போயிட நல்லவேளை, நீங்க வந்தீங்க. பத்து நிமிஷம் தள்ளியிருந்தால் என்ன ஆயிருக்குமோ?”

அந்த முகத்தின் துயரத்தைப் பார்க்கத் தைரியமில்லை. மடியில் கிடந்த தன் கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். "மறு குற்றம், முதல் குற்றத்தைச் சரியாக்கிவிடாது. நான் வந்தது காரணமோ, உனக்குத்தான் மனம் மாறிற்றோ, இப்போது நீ உயிரோடிருப்பதற்கு நான் அம்பாளுக்கு நன்றி செலுத்துகிறேன்.”

அவருக்குக் குரல் தழுதழுத்தது. அவர் கைமேல் அவள் கை பொத்திற்று. அவள் விழிகள் நிறைந்திருந்தன. கன்னங்கள் சிரித்தன. நேரம் உருண்டை முத்து. வார்த்தைகள் அழகிய கிளிஞ்சல்கள்.

"நாம் இங்கே இருக்க வேண்டாம்." இருவரும் எழுத்தனர்.

"ஆமாம், அலை அழைக்கிற மாதிரி இல்லை?" என்றாள்.

பூட்டைத் திறந்து, வீட்டுள் அவரை முந்திக்கொண்டு, இரு கைகளையும் தாழ்த்தி, "என் இல்லத்துக்கு நல்வரவு தாருங்கள்" என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/436&oldid=1497323" இலிருந்து மீள்விக்கப்பட்டது