பக்கம்:அவள்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338லா. ச. ராமாமிருதம்



அவளைக் காணோம். 'வருகிறேன்' என்று போனவள் இன்னும் திரும்பி வரவில்லை.

வரமாட்டாள் என்றும் எனக்கு உடனே தெரிந்து விட்டது.

எனக்குத் தோன்றியதே தீர்மானமாய் கடியாரத்தில் மணி அடித்தது. கூவிக்கொண்டே கீழே ஒடினேன். அம்மா விசுப்பலகையினின்று திடுக்கென்று விழித்துக் கொண்டு எழுந்தாள்.

"என்னடா?"

'அவளைக் காணோமே அம்மா?’’

'என்னடா பேத்தறே?"

அவளைக் காணோமே அம்மா! அம்மா பரக்கப் பரக்க வாசலுக்கும் கொல்லைப்புறத்திற்கும் ஒடினாள்.

அவள் எங்கே அம்மா அகப்படப் போகிறாள்?

"என்னடா அம்பி உக்காந்துட்டே? தேடேண்டா. என்னாவது பண்ணேண்டா. ஐயோ! என் குழந்தையைக் காணோமேடா!'

எனக்கு பெரும் ஒய்ச்சல் கண்டுவிட்டது.

'பிரயோசனமில்லையம்மா, அவள் அகப்பட மாட்டாள். அவளுடைய உயிரற்ற உடலை நாம் காணக் கூட அவள் இசையாள். சுறா மீன்களுக்கு இரையானாலும் ஆவேனேன்று, சமுத்திரத்திற்குள் நடந்து போய் விட்டாள். கடவுளுக்கு மயிரைக் கேட்டாய். உயிரையே கொடுத்துவிட்டாள் போ! அவள் சொல்லிக்கொண்டு தான் போனாள். எனக்குத்தான் தெரியவில்லை. ராகம் முடிந்துவிட்டது. இனி, வீணை வீணையாய் உபயோகப் படாது. அடுப்பில் வைக்கத்தான் சரி நான் என்னுள் இறந்துவிட்டேன்; இறந்தே போனேன். நீ எதைச் சொன்னாலும் கேட்கத் தயார்-'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/382&oldid=1497903" இலிருந்து மீள்விக்கப்பட்டது