பக்கம்:அலைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குண்டலி O 53


கொள்ளும்படி ஆயிற்று. ஆனால் எவ்வளவு தூரம் புத்தி சொல்லியே காக்க முடியும்? அப்பனும் பிள்ளையுமாயிருக்கிறோம்; சில விஷயங்களைத்தான் விவரித்துச் சொல்ல முடியும்; சிலதை ஜாடையாய் விட்டுவிடும்படியிருக்கிறது. ஆனால் அந்த சொல்லாத விஷயங்களில்தான் நீ ரொம்பவும் உஷாராயிருக்கணும். நான் என்ன சொல்கிறேன் புரிகிறதோ? புரிகிறதோ?- என்னடா சொல்லிண்டேயிருக்கேன், எங்கோ நினைவாயிருக்கே? ரயில் இதோ வந்து விடும். உன்னைத் தூக்கிண்டு போயிடும். ஆனால் அடுத்த தடவை நீ வரும்போது நான் இருக்கணுமேடா!"

அப்பா நாக்கில் சனி.

அப்பா சொன்னபடிதான் ஆயிற்று.

அத்துடன் என் படிப்பும் போயிற்று.

படிப்புடன் கனவுகள், கோட்டைகள், திட்டங்கள்....

வண்டி வருகிறது.

இதிலேதான் நான் ஏறணும்.

இன்று வண்டி லேட்'; இரண்டு நிமிஷங்களுக்குமேல் நிற்காது.

ஏனோ தெரியவில்லை, இன்று ஏகக் கூட்டம்.

இன்றென்று என்னோடு எல்லோருக்குமே விடுமுறை முடிந்துவிட்டதா?

"இந்தப் பக்கம் வாடா! வண்டி ஊதியாச்சு; அங்கெங்கேடா வட்டமிடறே?”

அவள் வந்திருந்தாலும் இந்த அவசரத்தில் எங்கு தென் படப் போகிறாள்?

துக்கம் தொண்டையை அடைத்தது.

என் பெட்டி படுக்கையுடன் அப்பா என்னை உள்ளே திணிப்பதற்கும் வண்டி கிளம்பவும் சரியாயிருக்கிறது. அப்பா ஆசியில் கையை உயர்த்துகிறார்.

அ.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/55&oldid=1287244" இலிருந்து மீள்விக்கப்பட்டது