பக்கம்:அலைகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198 O லா. ச. ராமாமிருதம்


வில்வ கொத்துத் தொங்கியது. அதை உள்ளே தள்ளி அதுக்கு முன், நாலு பேர் நாற்புறங்களினின்றும் பாய்ந்து வந்து, அவன் பாதங்களைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டார்கள். அவனால் அசையக்கூட முடியவில்லை, திடீரென்று அவனை ஒருவன் தோளில் ஏற்றிக்கொண்டான். பின்னால் மற்ற மூவரும் கொக்கரித்துக்கொண்டும் குதித்துக் கொண்டும். ஏதோ புரியாத பாஷையில் பேசிக் கொண்டும் பின் தொடர்ந்தனர்.

எல்லோரும் காட்டோரத்தில் ஒரு கிராமத்தை அடைந்தனர். அது கிராமங்கூட அல்ல. சேரி மாதிரி இருந்தது. இன்னும் ஏழெட்டு பேர் குடிசைகளிலிருந்து ஓடிவந்து, அவனைப் புரியாத பாஷையில் வரவேற்றனர். அவனை ஒரு குடிசைக்குள் கொண்டுபோய் இறக்கி, ஆகாராதிகளையும் ஜலத்தையும் அவன் முன் வைத்து விட்டு, கதவை மூடிக் கொண்டு எல்லோரும் வெளியேறினர்.

அவர்களுடைய' பிராம்மண பக்தி', அவனுக்குப் புரியவில்லை. வேளா வேளையிலும், வேண்டாத வேளையிலும் வேணும்வரை தீனி, ஆனால் வெளிக்கதவு மட்டில் எப்போதும் அடைப்பு. அவன் ஒன்றும் பேசவேயில்லை. மெளனத்திருக்கும் சக்தி வேறெதற்கு உண்டு? எவ்வளவுக் கெவ்வளவு நான் மெளனமோ, அவ்வளவுக் கவ்வளவு இவர்கள் நம்மைக் கொண்டாடும் பெருமையும் அதிகரிக்கும். தவிர, என்னதான் நடக்கிறதென்று பார்ப்போமே!

பின்பு-

ஒருநாள் உதயத்தில், சூரிய கோளம் தகதக என்று குன்றின் உச்சியை உதைத்துக் கொண்டு கிளம்புகையில், நாலு பேர் வந்து அவனை எழுப்பி, ஸ்நாந கட்டத்துக்கு அழைத்துப்போய், ஆசையாய், உடம்பை நன்றாகத் தேய்த்து, மயிரின் சடையையும் சிக்கையும் பிரித்து. உடல் பனிபோல் மின்னக் குளிப்பாட்டி, நெற்றியில் பதக்கம்போல் திலகமிட்டு, தலையில் பூச்சுற்றி, கழுத்திலே ஆரமிட்டு, கொட்டும் மேளமுமாய்க் கிராமத்தைச் சுற்றி வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/200&oldid=1290279" இலிருந்து மீள்விக்கப்பட்டது