பக்கம்:அலைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எங்கிருந்தோ வந்தேன் O 163



‘எசமான் உண்மையா சொல்றேன்; எனக்கொண்ணுமே தெரியாது. இந்த எல்லையிலே, இன்னிக்குத்தான் சத்தியமா விளக்கு வேளைக்கு காலெடுத்து வெச்சேன்-’’

"அப்பா!"

“உஷ்-சாமியாரே; பையன் உங்களை அழைக்கிறான். வாயே பேசாதவன் இன்னிக்கி அப்பான்னு அழைக்கிறான், வாங்க, வாங்க உள்ளே வாங்க; பயம் விட்டு வாங்க?”

ஐயோ உபசரிக்கிறாங்களா குழி பறிக்கிறாங்களா தெரியல்லியே! முருவா, கண்டுக்க காட்டிக் கொடேன்!

தாழ்வாரத்திலே திருநீறு பல்லா ஆடி ஆடி என்னை விளிக்குது.

“ஏ பண்டாரம்! வவுத்து நினைப்பிலே வேஷத்தை மறந்துடாதே!’ என் மனசு எச்சரிக்கை காட்டுது.

நடு வாசல்லே இலை போட்டிருக்காங்க; எனக்கு இலை அவங்களுக்குக் கிண்ணி.

தாழ்வாரத்துலே சுவத்தோரமா ரெண்டு பொம்புள்ளேங்க ஒட்டிக்கிட்டு காத்திட்டிருக்காங்க.

இலைக்குப் பக்கத்துலே மணைமேலே பையன் குந்திக்கிட்டு குள்ள வாத்து ரெக்கை அடிச்சுக்கற மாதிரி, ரெண்டு முழங் கையையும் விலாவுலே அடிச்சுக்கிட்டு, குந்தினபடியே என்னைப் பார்த்துக் கொம்மாளம் போட்டு குதிக்கறான். இவனைப் பார்த்தான் தான் ரொம்ப அச்சமாயிருக்குது. மறை லூஸா? ஆனால் அவங்கல்லாம் அவனைப் பாக்கறப் போல்லாம் அவங்க உசிரே அவங்க கண்ணுலே விளையாடுது. வீட்டு விசையே பையன்கிட்டத் தான் போல் இருக்குது.

பக்கத்திலே பையன்: அண்ணனும் தம்பியும் எதிரே, பெரியவர் உறுமினதும் பதார்த்தம் வெக்க ஆரம்பிச்சுட்டாங்க. தாழ்வாரத்தில் இரும்புக் கம்பியிலிருந்து சிம்னி விளக்கு தொங்குது. என் முகத்திலே மாத்திரம் அடிக்குது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/165&oldid=1288552" இலிருந்து மீள்விக்கப்பட்டது