பக்கம்:அஞ்சலி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 171

ஆனால் நான் என்னென்னு சொல்ல முடியும்? நான் என்னத்தைச் சொல்லி என்ன, நீங்கள் இடங்கொடுக்காமல்!

“அன்னிக்கு என் வயித்தில் வெச்ச பூச்சிதானோ என்னவோ, வாழ்மீகி பத்து மாதம் பொறுத்துப் பிறந்தான். என்னை மன்னிக்காட்டாலும் என் பிள்ளைக்காகவாவது என்னை மன்னியுங்கள் என்னை மன்னிக் காட்டாலும் பரவாயில்லே. என்னை நம்புங்கள். வாழ்மீகி தலைமேல் கைவைச்சு ஆணையிட்டுச் சொல்றேன். நான் உங்களுக்குத் துரோகம் பண்ணல்லே, வாழ்மீகி வாழ்மீகி—உங்கப்பா என்னை நம்பமாட்டேங்கறாடா! காற்றிலே மிதந்து வந்து என் கருவில் புகுந்தாய், நான் சொன்னால் யாருடா நம்பப்போறா?”

“வாழ்—மீகி—வாழ்மீகி...”

“அம்மா! அம்மா!!”

“வாழ்மீகீ—வாழ்மீகி!” அவள் வாய் குழறிற்று. அவள் கைகள் காற்றைத் துழாவின.

என் குழந்தே, என் குழந்தே! எங்கேடா நீ?”

“அம்மா! அம்மா!!” விக்கி விக்கி அழுதுகொண்டே அவள் கைகளைப் பிடித்து என் கழுத்தைச் சுற்றி வைத்துக் கொண்டேன். அம்மாவின் பார்வை என் பக்கமிருந்தது தவிர கண்களில் பார்வையில்லை.

“அம்மா! அம்மா!! அப்பா, அப்பா, அம்மா ஏன் அப்பா இப்படி இருக்கா?”

அப்பா முகத்தில் இரத்தக் குழாய்கள் விம்மி வெடித்து விடும்போல், முகம் அவ்வளவு “டால்” அடித்தது. என் தலைமேல் கையை வைத்தார். இறுகிய தாடைகளில் இரு எரி நீர்கள் வழிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/181&oldid=1033481" இலிருந்து மீள்விக்கப்பட்டது