பக்கம்:அலைகள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252 O லா. ச. ராமாமிருதம்


கையில் குழல்தான் பாக்கி. யார் தூக்கிக்கொண்டாலும், அவள் எவ்வளவு ரூபவதியானாலும், அவள் ஒளி உடலே மங்கிற்று. அதைக் குழந்தை வாங்கிக்கொண்டாற் போல்.

“குழந்தைக்குச் சுற்றிப் போடுங்கள் ஆயுசோட நன்றாயிருக்கணும்!”

தாயாருக்குப் பெருமை தாங்க முடியவில்லை. குழந்தை முகத்தைச் சுற்றித் தன் நெற்றியில் நெரித்துக்கொண்டாள். சொடக்குகள் சொடசொடவென்று உதிர்ந்தன. குழந்தை இடுப்பினின்றிழிந்து, கூட்டத்தில் புகுந்து, தன் வயதுக் குழந்தைகளுடன் விளையாடக் கலந்து கொண்டான்.

"ஒரு வயதுக்குமேல் எந்தப் பொம்மனாட்டியும் வெறுங் கையை வீசிண்டு வெளியே கிளம்பக்கூடாது.”

பெண்கள் கூட்டத்தை அவள் வெற்றிப் பார்வை வெள்ளோட்டம் விட்டது. 'இடுப்பில் ஒரு குழந்தை இருந்தால் தான் அழகு. அதுதான் அவளுக்குக் கெளரவம் !'

அவள் பெருமிதத்தில் ஆச்சரியமில்லை. ஆனால் எல்லோருக்கும் அவளுக்கு வாய்த்தாற்போல் இடுப்புக்கு எடுப்பாய்க் கிடைக்கணுமே என்பதுதான் கேள்வி,

செட்டியார் வீட்டு வைபவம் பிரமாதம். தெருவையடைத்துப் பந்தல், இரண்டு 'ஸெட்' பரிசாரகர். சமையல் ஓயாமல் நடந்துகொண்டேயிருக்கிறது. மத்தியானச் சாப்பாட்டிற்குப் பிறகு பஜனை. பிற்பகல் நாயனார். மாலை 'டீ பார்டிக்கு’ப்பின் பாட்டுக் கச்சேரி. இரவு விருந்துக்குப் பின் சதிர்க் கச்சேரி. இரண்டு பெரும் அறைகள் தேங்காய்க் கிடங்காயும் பாத்திரக் கிடங்காயும் மாறியிருக்கின்றன. என்னால் மூக்கில் விரலை வைக்காமல் இருக்க முடியவில்லை. முந்திரி. மாகாணிமேல் தன் பாதங்களை ஊன்றித் தானே இங்கு மகாலஷ்மி இப்படிப் பெருகியிருக்கிறாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/254&oldid=1286373" இலிருந்து மீள்விக்கப்பட்டது