பக்கம்:அவள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 லா. ச. ராமாமிருதம்



படிக்கற நாளிலே, எங்கேயோ வழியிலே கண்டெடுத்த பொண்ணை எவன் தலையிலேயாவது லேசிலே கட்டிவிட முடியுமா, என்ன?”

அவள் வாக்கு அசரீரிதான். ஐயர் தம் வளர்ப்புப் பெண் கல்யாணத்திற்குச் செய்யும் முயற்சிகள் எல்லாம், உருவாவதுபோல் ஆகி, திரளும் சமயத்தில் பொட்டென உடைகையில், அவருக்கு உள்ளுறத் திகிலே உண்டாயிற்று. ஒரு பெண் பிறந்தால், அதற்கு ஒர் ஆண் படைத்துத்தான் இருக்க வேண்டும் என்னும் கடைசி நம்பிக்கை, அல்லது நம்பிக்கையற்ற திடந்தான் அவரை உந்திக்கொண்டு போயிற்று. ஜாதகக் கட்டைத் தூக்கிக்கொண்டு எங்கெங்கோ வெளியூரெல்லாம் சுற்றி வந்தார்.

அப்புறம் ஒருநாள் எல்லாம் வேளை வந்தால் தானே வரும்: நாம் மாத்திரம் அவசரப்பட்டால் முடியுமா? பார், குழந்தைக்கு ஒரு புருஷனைத் தேடிப் பிடித்துவிட்டேன்!" என்று பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டே ஐயர் வீட்டுள் நுழைந்தார்.

பையன் எங்கோ துரதேசத்தில் ராணுவத்தில் வேலையிலிருந்தான்.

கல்யாணத்துக்கு முதல் நாள் மாலைதான் பையன் வீட்டார் வந்து இறங்கினார்கள். பிள்ளையைப் பார்த்தவர்கள் பிரமித்தே போய்விட்டார்கள். சிலர் அசூயையால் வெடித்தே போனார்கள். "ஜனனி காத்திருந்தாலும் காத்திருந்தாள்; அதிருஷ்டச் சீட்டு அடித்துவிட்டாள். பையன் சிவப்பிலேயும் சிவப்பு, செந்தாழைச் சிவப்பா ராஜா மாதிரி இருக்காண்டி!'

'மனையிலே உட்கார்ந்தா, ரெண்டுபேருக்கும் ஜோடிகூட ஒட்டாதேடி!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/188&oldid=1496965" இலிருந்து மீள்விக்கப்பட்டது