பக்கம்:அவள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கறந்த பால் 259

நாள் பயணமோ? ஒரு நாளா, ஒரு வருடமா, எத்தனை ஆயுசுக்களோ? இவளை வடித்த சிற்பி எந்தக் காலம்? உண்மையில் இவள் வடித்தவளா? நித்யத்துவத்தின் அலைகள் ஒன்றில் சவாரி செய்துவந்து...

பாஸ்கர் மூர்ச்சையானார். பாஸ்கர் அப்படி ஒன்றும் கற்பனா சக்தி படைத்தவர் அல்லர். ஆகையால் இது போன்ற சிந்தனை, சிந்தனையினின்று தோற்றங்கள், தன்னிடமிருந்து எழுந்தன, எழக்கூடியவை என்பதை அவரால் தாங்கக்கூடியதாக இல்லை. முதலில் அவை அவருடையதா? இல்லை; அவள் வைக்கும் பொறி.

திடீரென்று பாஸ்கருக்கு உடல் பரபரத்தது. அடுத்த தருணம் ஏதோ அமானுஷ்யம், ஆச்சர்யம் நிகழப்போவது போன்ற உணர்வு. தியானத்தில் மூடியிருக்கும் அவள் கண்கள் திறக்கப்போகின்றனவா? உடல் நடுங்க குத்து விளக்கைத் தூக்கி விக்ரஹத்தின் முகத்துக்கெதிரே பிடித்தார். புன்னகையின் அரும்புதான் விரிந்திருந்தது.

பாஸ்கர் மாரைப் பிடித்துக் கொண்டார். அவள் கண் திறந்தால் நிச்சயம் என்னால் தாங்க முடியாது. விக்ரஹத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, பாஸ்கர் கங்கோத்ரியிலேயே ஸ்னானம் செய்தார். இங்கு இரு மலைச் சாரல்களிடையே குழந்தைபோல் தவழ்கிறாள். பின்னால்தான்- அல்லது முன்னாலா? சங்கரரின் சடைமுடியே இலக்கான உக்ரஹம். அடுத்து மானசரோவர் ஏரி. ஹரித்வாரில் கங்கையின் குளிரே முதல் தொடலில் நெருப்பாய்ச் சுட்டது. அடுத்து, யமுனையின் சுழித்த கொந்தளிப்பில் திணறினார். கங்கை எவ்வளவோ தேவலை, பிரம்மபுத்திராவின் அலைகள், அவரைச் சின்னாபின்னமாக்க முயன்றன. ஆனால் அவளிருக்கப் பயமேது? காவிரி, தாமிரவருணி, முதலைகள் பக்கம் போகாவிட்டால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/303&oldid=1497846" இலிருந்து மீள்விக்கப்பட்டது