பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தமிழ் இலக்கியக் கதைகள்

கொள்கிற அளவு தமிழுணர்ச்சி இருந்தது. அப்போது அரசராக இருந்த வீரகேரள மன்னரை ஆதிசரவணப் பெருமாள் கவிராயருக்கு நன்கு தெரியும். அந்த மன்னர் சிறிது காலத்துக்கு முன் இராமேசுவரத்துக்குச் சேது தரிசன யாத்திரை வந்திருந்தார். அந்தக் காலத்தில் எப்பேர்ப்பட்ட பெரு மன்னனாயினும் சேது தரிசன யாத்திரை முடிந்து திரும்பும் போது சேதுபதியரசரைச் சந்தித்து வணங்கி அளவளாவிவிட்டுப் போக வேண்டும் என்பது ஐதீகமாக இருந்தது. சேதுகாவலர் என்ற புனிதப் பெயர் சேதுபதிகளுக்கிருந்தது.

எனவே சேது யாத்திரை வந்திருந்த வீரகேரள மன்னர், தமது யாத்திரையை முடித்துக்கொண்டு சேதுபதியைச் சந்திப்பதற்காக இராமநாதபுரத்து அரண்மனைக்கு வந்தார். அப்போது சேதுபதி இராசராசேசுவரி பூசைக்காக ஏழு நாள் வெளியேறாமல் மெளன விரதமும், பிற நோன்புகளும் பூண்டு உள்ளேயே இருந்ததன் காரணமாக மலை நாட்டு வீரகேரள மன்னர் ஏழு நாட்கள் இராமநாதபுரத்தில் காத்துக் கிடக்க வேண்டியதாயிருந்தது. மலையாள தேசத்துக்கே அரசனான அந்த மாமன்னன் சேதுபதி அரண்மனை வாயிலில் ஏழுநாள் தரிசனத்துக்குக் காத்திருந்த செய்தி ஆதிசரவணப் பெருமான் கவிராயருக்குத் தெரியும். ஒவ்வொரு தினமும் தாம் புலவர் என்னும் உரிமையுடனே அரண்மனைக்குள் நுழையும்போது வாயிலில் காத்து நிற்கும் வீரகேரள மன்னனைப் பரிதாபத்தோடு பார்த்துக் கொண்டே நுழைந்திருக்கிறார் கவிராயர். கடைசியில் எட்டாவது நாள் வீரகேரள மன்னன் சேதுபதியைச் சந்தித்து அளவளாவி விட்டுத் தன் நாடு திரும்பினான்.

அதே வீரகேரள மன்னனுடைய திருவனந்தபுரத்துக்குத் தற்போது நம் கவிராயர் வந்திருக்கிறார். ஊரெல்லாம் சுற்றிப் பார்த்தார். அநந்த பத்மநாப சுவாமி கோவிலுக்குப் போய்த் தரிசனம் செய்தார். கடைசியாக அரண்மனைக்குப் போய் வீரகேரள மன்னனையும் பார்த்து வரலாம் என்று கிளம்பினார். புலவர்கள் வந்து பார்க்கும் போது அந்தப் புலமையை மதித்து ஏதாவது மரியாதை செய்வது அரசர்கள் வழக்கம். அதனால்