பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தமிழ் இலக்கியக் கதைகள்

ஏற்று உண்ணுவதற்கு ஒப்புக் கொள்ளும்படியாக வயிற்றைப் படைத்திருக்கக் கூடத் தெரியவில்லையே இந்த நான்முகனுக்கு? ஒருவன் மற்றொருவனிடம் பல்லைத் திறந்து பிச்சை கேட்கும்படியாக அல்லவா படைத்திருக்கிறான்? இது யார் குற்றம்? பல்லைத் திறந்து பிச்சை கேட்பவனுடைய குற்றமா? இல்லை, படைத்தவன் குற்றம்தான். இப்படி நினைத்துக்கொண்டு வரும்போதே இந்த எண்ணங்கள் ஒரு பாட்டாக உருவாகி ! வெளிப்படுகின்றன.

கல்லைத்தான் மண்ணைத்தான்
காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா
இல்லைத்தான் பொன்னைத்தான்
எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா
அல்லைத்தான் சொல்லித்தான்
ஆரைத்தான் நோவத்தான் ஐயோ எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
புவியில் தான் பண்ணினானே.”’

பதுமத்தான் = பிரம்மன், நோவா = வருத்த.

பாடிக்கொண்டே நடந்தார் புலவர். பாட்டில் வரும் ‘தான்’ ‘தான்’ என்ற ஒவ்வொரு சொல்லும் அவரது உள்ள உருக்கத்தை நன்கு உணர்த்துகிறது.

24. புலவர்கள் பாவம்

பொதிய மலையின் அடிவாரம்.'சோ’ என்ற பேரொலியுடன் நுரைத்து வீழும் அருவிக் கரையில் கம்பீரமாகக் காட்சியளித்தது பெரியநாயகியம்மை கோவிலின் பிரதான வாசலின் கோபுரம், கோபுரத்தை ஒட்டிப் பின்னணியில் ஒரு பெரிய வெள்ளை முத்து மாலைபோல மலைமுகட்டிலிருந்து விழுந்து கொண்டிருந்தது நீர் அருவி. இந்த அற்புதமான இயற்கை அழகை எண்ணி