பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

103

சகோதரர்கள் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர். போட்டி, பொறாமை சிறிதும் இன்றி, என்றும் குன்றாத சகோதர் பாசத்துடன் அவர்கள் வாழ்ந்து வந்தது மற்றவர்களுக்கு வியப்பு அளிக்கத் தக்க முறையில் இருந்தது.

புலவர்களை வரவழைத்துப் பாராட்டி மகிழ்வதிலும் கூடச் சகோதரர்கள் அசாத்தியமான ஒற்றுமையும் அன்பும் காட்டினார்கள். மூன்று தம்பிமார்களும் அண்ணனிடம் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும்கூட அவ்வளவு உயர்ந்ததாகவே இருந்தது. முன்பு பலரிடம் இவைகளை எல்லாம் கேள்விப்பட்டிருந்த சொக்கநாதர் இப்பொழுது நேரிலேயே அங்கு நிதரிசனமாகக் கண்டு மகிழ்ந்தார்.

ஒரு நாள் உலாவச் சென்று விட்டு வெளியில் வீடு திரும்பிய போது வழியில் வந்து விழுந்து கிடந்த பெரிய கருவேல முள் ஒன்று சுருக்கென்று புலவரின் உள்ளங்காலில் தைத்து விட்டது. புலவருக்கு வலி துடிதுடித்தது. பொறுத்துக் கொண்டு காலைத் தூக்கி உள்ளங்காலிலிருந்த முள்ளின் நுனியைப் பிடித்து இழுத்தார். முள்ளின் முக்கால் பகுதி காலில் ஆழத் தைத்திருந்ததினால் நுனி மட்டும் முறிந்து அவர் கையில் வந்தது. இருளில் வேறொன்றும் செய்ய முடியாமல் அப்படியே காலை மெதுவாகத் தடம் பெயர்த்து ஊன்றி நடந்து மேலே சென்றார்.

இரவில் வீட்டிற்கு வந்த பின்பும்கூட வள்ளலிடமோ, மற்றவர்களிடமோ தமக்கு முள் தைத்தைப் பற்றி அவர் கூறிக்கொள்ளவில்லை. தாமாகவே அதை எடுக்க முயலவும் இல்லை. அப்புறம் ஏதேதோ இலக்கியச் சர்ச்சைகளில் ஈடுபட்டு விட்டு இரவு வெகு நேரத்திற்குப் பின் உறங்கப் போன போதுகூட அவர் அதை எடுப்பதற்கு எண்ணவில்லை. முள்தைத்ததை மறந்தே போனார் என்று கூடச் சொல்லலாம்.

நாட்கள் இரண்டு கழிந்தன. முள் தைத்ததை அவர் மறந்து பேனால் முள்ளும் அவரை மறந்து வலிக்காமல் இருந்து விடுமா என்ன? கால் வீங்கி விட்டது. ஆழத்தில் தைத்த முள் பழுத்து உள்ளே சீழ் கொண்டிருந்தது. இருந்த இடத்தில் இருந்து அப்புறம்