பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தமிழ் இலக்கியக் கதைகள்

எடுப்பார்கள்? ஊரில் எல்லோரும் அந்த அனாதைப் பிணத்தை வேடிக்கை பார்த்து விட்டுப் போனார்கள். ஒருவருக்காவது அந்தப் பிணத்தை அப்புறப்படுத்தி அதற்கு முறையாகச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்ய வேண்டுமென்று தோன்றவே இல்லை. காலம் கடந்து கொண்டே இருந்தது. அந்த நிலையில் அரங்கேச வள்ளலுக்கு இந்தச் செய்தி எட்டியது. எல்லோரும் ‘அனாதைப் பிணம் தானே’ என்று கேவலமாக நினைத்தது போல் அவரால் அலட்சியமாக இருக்க முடியவில்லை. அவர் பண்பாடு தெரிந்தவர். அதற்கேற்ப நடந்து காட்டினார். நாலைந்து மூங்கிற் கழிகளையும் அரிவாளையும் எடுத்துக்கொண்டு சவம் கிடந்த இடத்துக்கு அவர் தனியாகச் சென்றபோது ஊரே ஆச்சரியப்பட்டது. கழிகளை வெட்டி இணைத்துப் பாடையை அவரே கட்டினார். அவரே அப்படிச் செய்ததைப் பார்த்ததும் ‘நான், நான்’ என்று போட்டி போட்டுக் கொண்டு ஊரார் அவருக்கு உதவி செய்ய முன்வந்தார்கள்.அ வர் யாரையும் அருகில் நெருங்க விடவில்லை.

“ஒரு தமிழ்ப் புலவரின் சவத்தைத் தனியாகச் சுமந்து சென்று ஈமச் சடங்கு செய்யும் பெருமையை எனக்கு மட்டுமே கொடுங்கள்” என்று தனியாகவே அந்தச் சடலத்தைச் சுமந்து கொண்டு போய்த் தம் உறவினருக்கு உரிமையோடு செய்கிற மாதிரி ஈமக் கடன்களெல்லாம் தாமே செய்தார் அரங்கேச வள்ளல். அப்படிச் செய்ததில் அவருக்கு இணையற்ற பெருமிதம் ஏற்பட்டது. எல்லோரும் கேவலமானது என்று கைவிட்டு விட்ட காரியத்தை அவர் செய்தபோது உயர்வானதாக்கிப் பெருமை தேடிக்கொண்டார். தொண்டு செய்கிற மனிதனுக்குத் தான் செய்கிற காரியத்தைச் சாமானிய மனிதர்கள் கேவலமாக நினைப்பார்களே என்ற கூச்சம் இருக்கக்கூடாது. தன்னுடைய எண்ணத்தின் உயர்வால் தியாகத்தின் சிறப்பால் தான் செய்கிற காரியத்தையும் பெருமைப்படுத்தி விடவேண்டும், அதுதான் பண்பாடு.

"உறவைப் பிரிந்து வந்தே இறந்தான்
அங்கொரு புலவன்