பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

 நான் : அந்த மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் மாதவிடாய் கண்ட 10 ஆம் நாள் முதல் 19ஆம் நாள் வரை மொத்தம் 10 நாட்கள் காதல் செய்யாமல் இருந்தால் போதும், கருப்பம் உண்டாகாது.

வ. உ. சி : அப்படியானால் அந்தப் பத்து நாட்கள் தவிர மற்ற நாட்களில் காதல் செய்யலாம், அப்படிச் சொல்லுங்கள். இதைச் சொன்னால் யாரும் தடை சொல்லமாட்டார்கள். இன்னொன்று தம்பி ! அப்படியானால் எல்லா மாதங்களிலும் இந்த மாதிரி நடந்து கொண்டால் குழந்தை உண்டாவதையே தடுத்து விடலாம் போலிருக்கிறதே.

நான் : ஆமாம். அதில் சந்தேகமில்லை. இரண்டு மூன்று குழந்தைகள் உள்ளவர்கள், இனி வேண்டாம் என்று எண்ணினால் இந்த முறையைக் கையாண்டால் போதும், பிறகு குழந்தைகள் உண்டாகாது. பெற்ற குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்கலாம்.

வ. உ. சி : தம்பி நீங்கள் சொல்வது மிகவும் எளிதாகக் கையாளக்கூடிய முறையாக இருக்கிறது. இதை நான் என் மருமகப்பிள்ளையிடம் சொல்லுகிறேன், அவர் இதை ஏற்றுக்கொள்வார் என்றே நம்புகிறேன்.

இவ்வாறு தேசபக்தர் அவர்கள் மழை காலத்தில் குழந்தை பெறாமலிருப்பதற்கான முறையைக் கேட்டுக் கொண்டபின் கம்பராமாயணம் போன்ற இலக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள். ஒருமணி நேரம் அவர்களுடன் இருந்துவிட்டு நானும் என் மனைவியும் விடை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினோம்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்தது எல்லோர்க்கும் பயன்படும் என்று இங்கு எழுதுகின்றேன்.