பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42. நாகதேவன் சோற்றுக்கடை

அந்த ஊரில் நாகதேவன் சோற்றுக் கடையை விட்டால் சாப்பிடுவதற்கு வேறு சோற்றுக் கடை கிடையாது. பல காலமாக அவன் ஒருவன் தான் அங்கே சோற்றுக் கடை வைத்து நடத்தி வந்தான். அந்தத் தொழிலில் அவனுக்கு அனுபவமும் பழக்கமும் நிறைய உண்டு என்பதை அங்கே ஒருமுறை சாப்பிட்டவர்களைத் தவிர மற்ற எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள்.நாகதேவன் மட்டும் சாப்பிட வருபவர்களையும் அவர்கள் செளகரியங்களையுமே கவனித்து வந்திருந்தானானால் இதுவரை அவன் இவ்வளவு பணம் சேர்த்திருக்க முடியாது! பணம் சேர்க்கும் ஆசை இல்லை என்றால் அவன் எதற்கு அந்தச் சோற்றுக் கடையைக் கட்டிக் கொண்டு அழப் போகிறான்? “அங்கே சாப்பிட்டால் அஜீரணம் கண்டிப்பாக வரும் கல்லும் நெல்லும் உமியும் கலவாத சோறு எப்படியிருக்கும் என்றே நாகதேவனுக்குத் தெரியாது! ஏறக்குறைய மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் காய்கறி வாங்குவது என்று அவன் சந்தைப் பக்கம் போவான். வாங்கி வந்த கறிகாய்களை அதற்குப் பிறகு ஆறு மாதம்வரை வைத்துக் கொண்டு கடையை நடத்திவிடுவான். ஆறு மாதமாக வாடி வதங்கும் கத்தரிக்காயை வைத்துக் கொண்டே சமாளிக்கும் வித்தை அவனுக்குத் தெரியும். அவன் காய்ச்சி ஊற்றுகின்ற புளிக்குழம்பைப் பற்றியோ கேட்கவே வேண்டாம் உப்பில்லாத கஞ்சி போலிருக்கும். காம்பு ஒடிந்து போன அந்த ஆதிகாலத்து அகப்பையைக் கையில் பிடித்துக் கொண்டு அவன் குழம்பை ஊற்றும்போது அது நழுவி இலையில் விழுந்துவிடுமோ என்று சாப்பிடுபவர் பயப்படும்படியாக இருக்கும். .

அவன் சமையல் செய்யும் பாத்திரங்களின் இலட்சணத்தைப் பற்றிக் கேள்விப்பட நேர்ந்தாலே போதும். நீங்கள் மூர்ச்சை போட்டு மயங்கித் தலைச் சுற்றி விழுந்து விடுவீர்கள். அவ்வளவு அழுக்கும் கரியும் கறையும் தழும்பேறிப் பல காலம் சேவை செய்து வரும் சின்னங்களோடு காட்சி தரும் அவை, இலையில்