பக்கம்:வெள்ளை யானை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிவுரை

அகலிகை வால்மீகியின் படைப்பு. அகலிகையின் கதை முதன்முதலாக வால்மீகி இராமாயணத்தில்தான் காணப்படுகிறது:

"கெளதம முனிவரும் அவர் மனைவி அகலிகையும் இந்த ஆசிரமத்தில் இருந்து வந்தார்கள். இடையூறின்றி அவர்களுடைய தவமும் நடந்து வந்தது. ஒரு நாள் இந்திரன் சமயம் பார்த்து ஆசிரமத்தில் முனிவர் இல்லாத காலத்தில், கெளதமருடைய உருவத்தையும் முனி வேஷத்தையும் தரித்துக்கொண்டு ஆசிரமத்துக்குள் புகுந்தான். அகலிகையின் உலகப் பிரசித்தமான அழகை நினைத்து அவளையடையும் கெட்ட எண்ணத்துடன் வந்தான். இவ்வாறு திருட்டுத்தனமாக வந்த தேவராஜன் அகல்யா தேவியைப் பார்த்து, 'அழகியே! எனக்கு ஆசை மேலிட்டிருக்கிறது. இந்த நிலையில் காலப் பொருத்தம் பார்க்க லாகாது. நாம் கூடுவோம்’ என்று முனிவர் சொல்வதுபோல் சொன்னான்.

ரிஷியின் மனைவி உடனே விஷயத்தைத் தெரிந்துகொண்டுவிட்டாள். இவன் தன் புருஷன் இல்லை; இந்திரன் என்பது அவளுக்குத் தெரிந்துவிட்டது. ஆயினும் தேவ ராஜனே தன்னைத் தேடி வந்தான் என்று தன் அழகைப்பற்றிக் கர்வப்பட்டு மனநிலை இழந்துவிட்டாள். தேவராஜனுடைய விருப்பத் துக்கு உடன்பட்டுவிட்டாள்." இது வால்மீகி ராமாயணத்தில் உள்ள அகலிகை கதை.

- சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி இராமாயணம், வானதி வெளியீடு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/36&oldid=1310951" இலிருந்து மீள்விக்கப்பட்டது