பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26சீவக சிந்தாமணி



அங்கலாய்த்தான் பதுமுகன். “அதற்காக நாம் வைரக் கத்தியில் கழுத்து அறுத்துக் கொள்ள முடியுமா? யோசித்துச் செயல்படுவோம்” என்றான் புத்திசேனன்.

அரச இரத்தம் சீவகன் உடம்பில் ஓடியது; குடி மக்கள் அவலம் தீர்ப்பது தன் கடமை எனக் கருதினான். “அந்நியர்கள் வந்து சூறையாட தந்நிலை மறந்து அடி பணிவதா? இது நம் ஆண்மைக்கு இழுக்கு” என்று கூறிப் படை திரட்டினான்.

கட்டியங்காரனது படைவீரர்களை அடித்துத் துரத்திய வேடுவர் சீவகன் தனி ஒருவன் தானே இவனை வெல்வது எளிது என்று துணிந்து முன் வந்தனர்; அவர்கள் தமக்கு நிகரற்றவர் என்பதால் அவர்களை அச்சுறுத்தி அடிபணிய வைத்தான். கத்தியின்றி இரத்தமின்றிச் செய்த யுத்தமாக அது இருந்தது. அவர்கள் உயிர் பிழைத்தது போதும் என்று சொல்லி, பிடித்து வைத்த பசுவின் கூட்டத்தைக் கொண்டு வந்து விட்டனர். அவர்கள் தம் பகைவர்கள் அல்ல என்பதால் அவர்களை மன்னித்து விட்டான்.

அவர்கள் அது முதல் அந்த நகர் இருக்கும் திசை நோக்கித் திரும்பிப் பார்ப்பதைத் தவிர்த்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பசு நிரைகள் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன; அவை தம் கன்றுகளை நினைத்துக் கொண்டு மடியில் நிறைத்திருந்த பாலை அடி வயிற்றில் சுமந்து அவற்றிற்கு ஊட்ட விரைந்தன. அவற்றைக் கண்ட பாவையர் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு சீவகனைப் பாராட்டினர்.

நந்தகோன் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியது; ஊரவர் ஆநிரைகள் வந்து சேர்ந்தமை, மற்றும் அரமகள் அனைய தன் மகளுக்கு உகந்த கணவன் நேர்ந்தமை, இவ்விரண்டும் காரணம். அவன் உள்ளக் குமுறலைச் சீவகன் முன் அள்ளிக் கொட்டினான்.