பக்கம்:மாணவர்களுக்கு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

மாணவர்களுக்கு

நீ படித்த லரலாற்றுப் பாடத்தில் ஒன்றை நினைவு கூர்ந்து முதல் கட்டுரையாக எழுதலாம். பிறகு அப்பாடத்தை உன் கட்டுரையோடு ஒப்பு நோக்குதல் வேண்டும். மாறுபட்டிருப்பவைகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். பின்பு மற்றொருநாள் வேறு ஒரு பாடத்தில் படித்தவைகளை நினைவு கூர்ந்து எழுதுதலும், பிறகு ஒப்பு நோக்குதலும், திருத்திக் கொள்ளுதலும் நலமாகும்.

அடுத்து, எங்கேனும் நடந்த ஒரு நிகழ்ச்சியை அல்லது சொற்பொழிவைக் கட்டுரை வடிவில் எழுதிப் பார்த்து மகிழலாம்,

அதன் பிறகு, நாடு, மொழி, தொழில், வணிகம், சமூகம், சீர்திருத்தம், அறிவியல், முதலியன பற்றி நன்கு சிந்தித்துக் கட்டுரைகளை எழுதுவது நல்லது. அவற்றையும், பிற சிறுகதைகளையும், நகைச்சுவை கலந்து எழுதி நாளிதழ்களுக்கும். திங்களிதழ்களுக்கும் அனுப்ப வேண்டும். அடுத்து அந்த இதழ்கள் உன் கட்டுரைகளை வெளியிட்டு உன்னை ஒரு சிறந்த எழுத்தாளனாக ஊக்குவிக்கும்.

ஆகவே, தம்பி! நீ எழுது. நன்றாக எழுது. நல்லதையே எழுது. நல்ல எண்ணங்கொண்டு எழுது. வாழ்த்தா, வசையா என்று பாராதே. வெற்றியா, தோல்வியா என்று எண்ணாதே. நீ எழுதிக் கொண்டேயிரு. ஆனால் நீ எழுதத் தொடங்கும் முன்னே உன் உள்ளத்தை உயர்த்திக் கொள். உன் உள்ளம் உயர உயர நீ உயர்வாய்.

நேர்மையான குறிக்கோளை முன்வைத்து, தூய உள்ளத் தோடு எழுதுபவன். வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதில்லை. அது அவன் காலடியில் தானே வந்து விழும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/43&oldid=1271699" இலிருந்து மீள்விக்கப்பட்டது