பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணமாலையார் இலம்பகம்79



“மற்றொருத்தி எங்கே?” என்று சற்றுக் கவனித்த அவள் தாய் இந்தக் கேள்வியை விடுத்தாள்.

“நேற்றுவரை இருந்த உறவு இன்றுவரை நீடிக்கவில்லை” என்றாள் அவள் தோழிகளுள் ஒருத்தி.

“என்னடி? என்ன நடந்தது? ஒரே பல்லவிக்கு இரண்டு பேர் சரணம் பாட ஆரம்பித்தார்களா” என்றாள்.

“இல்லை; அவள் மட்டும் தான் அதை இப்பொழுது பாடப் போகிறாள்; எனக்கு இடமில்லை” என்றாள் சுரமஞ்சரி.

“சுண்ணத்தின் காரணமாக இருவரும் எண்ணம் வேறுபட்டனர்” என்று தோழியர் விளக்கினர்.

“அவளுக்கு முகமூடி ஏன்” என்றாள் மஞ்சரியின் தாய்.

“மற்றவர்கள் யாரும் தன் முகத்தைப் பார்க்கக் கூடாது! தான் மட்டும் இரண்டு துளைகள் கண்ணுக்கு என்று வைத்துக் கொண்டு மற்றவர்களைப் பார்க்கப் போகிறாளாம்” இது தோழியின் விடை.

“கன்னிமாடம் ஒன்று தனக்காகக் கட்டித் தரவேண்டும்; அன்னியர் யாரும் அங்கே வரக் கூடாது” என்றாள்.

“கட்டிக் கொடுக்க வேண்டியவள் நீ அங்கே ஒட்டிக் கொண்டிருந்தால் எப்படி?”

“என்னை அழவிடு; அழுவதற்கு ஒரு இடம் வேண்டும்; அதற்குத்தான் நான் தனி இடம் கேட்கிறேன்” எனறாள்.

“சிரிப்பதற்கு இடம் கிடைக்கும்வரை சீராக அவள் அங்கேயே இருக்கட்டும்” என்று அவள் மனப் போக்கின் படி அவள் தாய் விட்டு விட்டாள்.