பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


அரசனது தகுதிகளை அறிவிக்கும் சின்னங்கள். அரசனது வலிமைத் தகுதிக்கு வேல், வாள் முதலிய படைகள்; வெற்றிக்குக் கொடி காத்தற்குக் குடிமக்கள்; அறிவிப்பிற்கு முரசு படை வலிமைக்குக்குதிரை, யானை, தேர்ப்படைகள் என்று வகுத்துக் கொண்டே வரும் தொல்காப்பியர், யாவற்றிலும் சிறந்த அரசச் சின்னமாகிய முடியைச் சொல்லி, முடி சூட்டி முடிக்க எண்ணியவர் அதற்குமுன் மலர் மாலையை வைத்து, "படையுங் கொடியும் குடியும் முரசும் நடைநவில் புரவியும் களிறும் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய"55- என நிறைவேற்றியுள்ளார். அரசர்க்குரிய சின்னங்களில் மலர் மாலை குறிக்கத்தக்க ஒன்றாகக்கொள்ளப்பட்டது. அதனைத் 'தார்’ என்று குறித்தார். தார்' என்பது மார்பில் அணியும் மலர்த் தொடுப்பு. இது மன்னனது மார்பு அழகு, வலிமை இரண்டுக்கும் எடுத்துக் காட்டாகும் அணி. இவ்விரண்டையும் புலப்படுத்தும் அறிவிப்புச் சின்னமாகத் தார் - மலர் வகுக்கப்பட்டது. பழந்தமிழகத்தில், சிறப்பு கருதியும் தொழில் கருதியும் இருந்த பெயர்களைச் சாதிப் பாகுபாடாக மாற்றிக் காட்ட வந்தேறிகள் முனைந்தனர். அவர்க்கு ஒத்தூதிய தமிழ்ப்புலவர் சிலர் தொல்காப்பியத்திலும் இடுக்கேற்படுத்திப் புகுந்தனர்; இடுக்கண் படைத்துள்ளனர். அந்தணர், அரசர், வைசிகர், வேளாளர் என நால்வகைச் சாதியாகக் குறித்தோர், "வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை" 56 -என்ற நூற் பாவைத் தொல்காப்பியத்தில் படைத்தனர். இது இடையே செருகிப் புகுத்தப்பட்டது என்பதை 'வைசிகன்’ என்னும் வட சொல்லேகாட்டிக்கொடுக்கின்றது. வணிகம் செய்பவனுக்கு 'வணிகன்’ என்னும் சொல் முறைப்படி அமைந்திருக்க 'வைசிகன்’ என்னும் வடசொல் வந்தது எவ்வாறு? சங்க இலக்கியங்களில் எங்கும் இல்லாதது இச்சொல். வணிகக் குடும்பக் காப்பியங்களாகிய மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் காண முடியாத சொல். இவற்றிற்கெல்லாம் முன்னே தோன்றி இவற்றிற்கெல்லாம் 55. தொல் :பொருள் : 616 58. தொல்: பொருள் : 624