பக்கம்:வாழ்க்கை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

91


தனி மனிதன் உயிரோடு இருப்பதுமட்டும் வாழ்க்கையாகாது என்ற உண்மையை மனித சமூகம் ஆயிரக் கணக்கான வருடங்களாக ஆராய்ந்து கண்டிருக்கிறது. மனிதன் மிருகம் அல்லன் என்று கருதுவோர்கள் இந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். உலகம் உருள்வதும், பூமி ஆகர்ஷண சக்தியைப் பெற்றிருப்பதும் எவ்வளவு உண்மையோ, அவற்றைவிட அசைக்க முடியாத உண்மையாக இதைக் கருதுகிறார்கள். பாமரர்களும், பண்டிதர்களும், கிழவர்களும், குமரர்களும், குழந்தைகளும்- எல்லோரும் இதை உணர்ந்து ஏற்றுக் கொள்கிறார்கள். ஆபிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலுமுள்ள சில காட்டு மிராண்டிகளுக்கு மட்டுமே இது விளங்காமலிருக்கும். ஆனால் ஐரோப்பியத் தலை நகரங்களிலும், பட்டணங்களிலும் நல்ல செல்வத்தோடு வாழும் மனிதர்களுக்கும் இது விளங்கவில்லை. இவர்களும் காட்டு மிராண்டிகளாக ஆகிவிட்டார்கள்.

தனி மனிதன் உயிரோடு இருப்பதுதான் வாழ்க்கை என்ற கருத்தை மனித சமூகம் கைவிட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. இனி அதை மறுபடி மேற்கொள்ள முடியாது. மேலும் தனி மனிதனின் வாழ்க்கைக்கு அர்த்தமே யில்லை என்பதையும் மறக்க முடியாது. நாம் என்ன எழுதினாலும், பேசினாலும் எவைகளை யெல்லாம் கண்டு பிடித்தாலும், தனி வாழ்வை எவ்வளவு தான் செம்மைப்படுத்தினாலும், மனிதனுக்குத் தனி இன்பம் இல்லை என்ற அசைக்க முடியாத உண்மையை மறுக்க இயலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/98&oldid=1122177" இலிருந்து மீள்விக்கப்பட்டது