பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி அறிவைப் பயன்படுத்துகிறவன் எடுத்த செயலைச் சிறக்கத் தொடுத்து வெற்றி பெற முடிப்பான் என்பதுதான் பஞ்ச தந்திரக் கதைகளில் அமைந்துள்ள கருத்தாகும். முன்னதாகவே ஆழ்ந்து சிந்தித்து வேலை செய்யும் அறிவுடைமைக்கு பஞ்ச தந்திரக் கதைகளின் ஆசிரியர் முதன்மை கொடுத்துச் சிறப்பிக்கிறார். சூழ்நிலைக்கேற்ற சிந்தனையை அடுத்தபடியாக ஆதரிக்கிறார். மேற்போக்காகப் படிக்கும் போது, ‘எப்படியாவது சூழ்ச்சி செய்து. தான் வாழ்ந்தால் போதும்’ என்ற கருத்தை ஆசிரியர் கூறுவதாகத் தோன்றக் கூடும். ஆழ்ந்து கதைகளைப் படித்துப் பார்த்தால்தான், ஆசிரியர் நெறி வழிப்பட்ட சூழ்ச்சி முறைகளை மட்டுமே ஆதரிக்கிறார் என்பது தெளிவாகப் புலப்படும். ஆசிரியர் கொள்கை, யாரும் ஏமாளித்தனமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதேயாகும்.

வருங்காலக் குமுகாயம், சூழ்ச்சிகளுக் காட்படாத-ஏமாறாத-தன்னறிவுள்ள குமுகாயமாக வளர வேண்டுமானால், இதுபோன்ற சூழ்ச்சி முறைக் கதைகளை நிறையப் படிக்க வேண்டும். அறிவு வளர வேண்டும். இதுவே என் ஆசை.

நாரா நாச்சியப்பன்