பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

47

டிருக்கும். இதனை நெய்தல் மூக்கு என்பர் (நற். 372). முகை அவிழ வேண்டுமெனின் புறவிதழின் திருகமைப்பு பிரிதல் வேண்டும். புறவிதழ் விரிந்தால் அகவிதழ்கள் மலரும். இவை விரிந்தால்தான் சுரும்பின் இனம் இவற்றின் அடியில் பிலிற்றும் தேனை நுகர்தல் கூடும். இதன் நறுந்தேனைச் சுரும்பு உண்ணுதற்குப் பெரியதும் தண்ணிதுமான நெய்தல் மலரும் என்பர்.

“சுரும்புண மலர்ந்த பெருந்தண் நெய்தல்”

-அகநா. 290-14
சாகுந்தல நாடகத்தின் தொடக்கத்திலே அதன் ஆசிரியர் பாடினி வாயிலாக இயற்கை எழிலைப் புலப்படுத்துகின்றார். ஆசிரியர் மறைமலை அடிகளார் அச்சுலோகத்தைத் தமிழ்ச் செய்யுளாக மொழி பெயர்க்கின்றார். மலர் முகிழ் விரிதற்கு வரிவண்டு முத்தமிடும் என்கிறார்.

“விரியும் மணம்அவிழ்க்கும் மலர்முகிழ் மேல்எல்லாம்
 கரிய வரிவண்டு முத்தமிடல் காணாய்”

நெய்தல் மலரோ சுரும்பு மது நுகரும் பொருட்டு, விரிந்து மணம் பரப்பும் என்பர் அகநானூற்றுப் புலவர். நெய்தற்பூ, மட்டும் கபிலரால் ‘நீள் நறுநெய்தல்’ எனவும் ‘கட்கமழ் நெய்தல்’ எனவும் குறிஞ்சிப் பாட்டில் சிறப்பாகப் பாடப் பெறும்.

நெய்தல் என்பது எது என்று இந்நாளில் தாவர நூற் புலவர்களும், தமிழ் நூற் புலவர்களும் பெரும்பூசலிடுகின்றனர். ஆசிரியர் நச்சினார்க்கினியர் இதனை அன்றைக்கே தெளிவுபடுத்தியுள்ளார். அவர் ‘நீள் நறு நெய்தல்’ என்ற குறிஞ்சிப் பாட்டு அடிக்கு (79) நீண்ட நறிய நெய்தற் பூ என்று கூறினாராயினும், ‘கட்கமழ் நெய்தல்’ என்றவிடத்து (குறிஞ். 84) தேன் நாறுங் கருங்குவளை என்று உரை கூறினார். மேலும் அவரே ‘தண்கயக்குவளை’ (குறிஞ். 63) என்றவிடத்து ‘குளிர்ந்த குளத்திற் பூத்த செங்கழுநீர்ப்பூ’ என்று உரை வகுத்தார். ஆகவே நெய்தல் என்பது கருங்குவளை எனவும், குவளை என்பது செங்கழுநீர் எனவும் எளிதில் அறியலாம். இதனை அறியாத விரிவிலா அறிவினர் வாய்க்கு வந்தவாறு உரை எழுதிக் குழப்பி விட்டனர். ஆசிரியர் நச்சினார்க்கினியர் இங்ஙனம் உரை கூறியதற்கு மூலமில்லாமலில்லை. ‘சிறுகரு நெய்தல்’ என்ற பேயனார் கூற்று (அகநா. 230-2) மீள நினைதற்பாலது. கபிலர் நெய்தலையும் குவளையையும் தனித்தனிப் பிரித்துப் பேசுவர். அன்றி நீலப்பூ ஒன்றும் இவற்றுடன் இணைத்துப் பேசப்படுகின்றது.