பக்கம்:தமிழ் நாட்டு விழாக்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

V

வீட்டு விழாவை நாட்டு விழாவாக்கிய நாகரிகத்தை வரலாற்றிலே காண்கின்றோமே! தமிழ்நாட்டு விழாக்கள் அந்த வகையில் அமைந்தனவேயாகும். நாட்டில் எந்த வேறுபாடும் அன்று இருக்கக்கூடாது. சாதியாலும், சமயத்தாலும், நிதியாலும், நிறத்தாலும், வேறு எந்த வகையாலும் மக்கள் வேறுபாட்டினைக் காட்டலாகாது. அன்று பசி என்று ஒருவன் காட்டில் பரிதவிக்கக்கூடாது. நோயாளியென்று, அன்று யாரும் மருத்துவம் நாடிச் செல்லக்கூடாது. இதுவே, விழாவின் அடிப்படை.

விழாவன்று மட்டும் அவ்வாறு அமைந்து, மறு நாள் நாட்டு நிலை மாறினும் பயன் இல்லை. எனவே, அவ்வாறு நாடு திருந்துவதற்கேற்ற சூழ்நிலை உண்டாகவேண்டும். அதற்கேற்ற வகையில் நாட்டில் வற்றாத வளம் பெருக வேண்டும். அவ்வளம் பெருக வான் சுரக்க வேண்டும். அப்பொழுதுதான் நாடு விழாவாற்றின பலனைப் பெற்றதாகும். இக்கருத்தையெல்லாம் உட்கொண்டு தான் காவிரிப்பூம்பட்டினத்தில் விழாவினை மக்கள் அறிய முரசறைந்த வள்ளுவ முதுமகன்,

பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி

மேல் விழாவினை அறிவுறுத்தினான் என்று அறிகின்றோம். இவ்வடிகளையும் கருத்தினையும் இந்நூலில் ஆங்காங்குக் கட்டுரைதோறும் காட்டியுள்ளேன்.ஆம்! அந்த விழைவு நிறைவேறினால்தான் விழாவின் அடிப்படையும் நிறைவேறும்.

தமிழ் நாட்டு விழாக்களில் பல, உழவர் கொண்டாடுவனவே. உழவர்கள்தாமே நாட்டில் பெரும்பாலாராக உள்ளனர்? இவை போன்ற உழவர் விழாக்கள் வடநாட்டிலும் கொண்டாடப்பெறுகின்றன. நிலம் செம்மைப் படுத்தும்போதும், உ ழ வி ன் போதும், அறுவடையின் போதும், பூச்சிகளைப் போக்கும்போதும், வழிபாட்டைப் பெருக்க விரும்பும்போதும் அங்கு வழிபாடும் விழாவும் ஆற்றுவர் என அறிகின்றோம். மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலே இங்கு மட்டுமன்றி, அங்கும் பல விழாக்கள் நடைபெறுகின்றன. ஊரில் கெட்ட காற்றுப் புக, அதை நீக்க மக்கள் ஒன்று சேர்ந்து, கையில் கொம்பு கொண்டு, தெருக்களில் பாடல்களோடு சுற்றி வருவார்