பக்கம்:தமிழ் நாட்டு விழாக்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை


உலகெங்கணும் வாழ்கின்ற மக்கள் தாம் என்றென்றும் இன்பத்தில் திளைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். அவ்வாறு எண்ணுதல் இயல்புங்கூட. ஆனால், அனைவரும் அவ்வாறு எண்ணிய இன்பத்தை எண்ணியாங்குப் பெறுதல் இயலாது. அதையும் நாம் காண்கின்றோம். என்றாலும், வாழ்வில் சில நாட்களையாவது அனைவருக்கும் இன்பநாளாகக் காண விரும்புகின்றனர் நல்லவர்கள். “எத்துணைத் துன்பத்தில் பட்டுழன்றாலும், வாழ்வில் சில நாளாவது அனைவரும் ஒருசேர இன்பத்தில் திளைக்கவேண்டாவா? என்று எண்ணிற்று அவர்தம் உள்ளம். அந்த உள்ளத்தின் உணர்வே உலகில் விழாக்கள் தோன்ற வழி காட்டியாய் அமைந்தது.


விழாக்கள் நாடுதோறும் ஒவ்வொரு வகையில் நடைபெறுகின்றன. மேலை நாடுகளிலும் ஆண்டுதோறும் பல விழாக்கள் நடைபெறுவதைக் காண்கின்றோம். சமயச் சார்பு பற்றி நடைபெறும் விழாக்கள் சில, சமூகச் சார்பு பற்றி நடைபெறும் விழாக்கள் சில, பருவமும் நாளும் பற்றிக் கொண்டாடப்பெறும் நாட்கள் சில. பாரெலாம் சிறக்கவேண்டி ஆற்றும் வழிபாட்டு விழாக்களும் சில. இன்று உலகமெல்லாம் ஒருசேரக் கொண்டாடும் ஐக்கிய நாடுகள் தினவிழா முதலியன, உலகம் ஒற்றுமையாகக் கலந்து கொண்டாடப்பெறுவன. நம் பாரத நாட்டில் கொண்டாடப்பெறும் ஆகஸ்டு பதினைந்தும், ஜனவரி இருபத்தாறும்.- விடுதலை விழாவும், குடியரசு விழாவும்-நம் நாட்டு மக்கள் அல்லல் அகன்று அடிமை வாழ்வு நீங்கி மகிழ்ச்சியில் சிறந்த நாட்களே நினைவூட்டும் விழாக்களாகும். டிசம்பர் 25-ஆம் நாள் கிறிஸ்தவர்தம் சமயத் தலைவரைப் பற்றிய நாள். அதைப் போன்று மகமதியமும், பெளத்தமும், சமணமும் தத்தம் சமய விழாக்களைக் கொண்டாடுகின்றன. நம் நாட்டில் நெடுங்காலமாக நிலைபெற்று வரும் சைவமும் வைணமும் அவை போன்ற விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளன.


தமிழ் நாட்டில் நாம் மேலே கண்ட அத்தனை வகையான விழாக்களும் நடைபெற்றன என்று அறிகின்றோம். சமயச் சார்பான விழாக்களும் உள; சமுதாயச் சார்பான