பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

 திருச்சிராப்பள்ளியில் முனிவர் இருக்கும் பொழுது, சந்தா சாகிபு என்னும் நவாபு ஆட்சி புரிந்துவந்தார். அவர் முனிவரின் வசீகர சொற்பொழிவுகளையும், கல்விப் புலமையையும், அறிவின் தெளிவினையுங்கண்டு, அவருடன் நட்புக்கொண்டார். முனிவர் நவாபுடன் அளவளாவும்பொருட்டு இந்துஸ்தானி, பாரசீகம் முதலிய மொழிகளைப் பயின்றார் : பின்பு சந்தா சாகிபைக் கண்டு பேசி, தம் பொன் மொழிகளால் நவாபை வசீகரித்தார். அப்பொன்னுரைகளைக் கேட்டு இன்புற்ற சந்தா சாகிபு, அவரது அறிவின் திறத்தை மெச்சி, அவரைத் தம் திவானாக நியமித்துக் கெண்டார்; மேலும், திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் உள்ள அரசூர், நல்லூர் முதலிய சிற்றுார்களை முனிவருக்கு இனமாகத் தந்து, தந்தப் பல்லக்கு ஒன்றையும் ஈந்தார். இச்சிற்றூர்கள் ஒவ்வோர் ஆண்டிலும் 12,000 ரூபாய் வருமானம் தருபவை.

வீரமா முனிவர் தம் 66-ஆம் வயதில் சேர நாட்டைச் சேர்ந்த அம்பலக்காடு என்னும் ஊரை அடைந்தார். அவர் அங்குள்ள கல்லூரியின் மேற் பார்வையாளர் பதவியைத் திறம்பட வகித்து வந்தார்; அப்பதவியிலிருந்தவாறே பல உரைநடை நூல்களையும், செய்யுள் நூல்களையும் இயற்றினார். இறுதியில் தைரியநாதர் ரெவரெண்டு பெஸ்கி என வழங்கும் வீரமாமுனிவர் கி. பி. 1747-ஆம் ஆண்டு பிப்ரவரிமாதம் 4-ஆம் தேதி மண்ணுலக வாழ்வை நீத்து விண்ணுலக வாழ்வை அடைந்தனர்.

வீரமா முனிவர் தமிழ் மொழியைப் பயின்று, புலமை பெற்றதுடன் நிற்காமல், அம்மொழியில் பலசெய்யுள் நூல்களையும், உரைநடை நூல்களையும், இலக்கண நூல்களையும், அகராதிகளையும் இயற்றித் தமிழ் அன்னையை அலங்கரித்துள்ளார்.