பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

167



944.எவ்வளவு படித்தாலும் பலதிறப்பட்ட நூல்களைப் படிப்பதே நல்லது. ஒரே வகை நூல்களை மட்டுமே படிப்பவன் தவறான அபிப்பிராயங்கள் உடையவனாவான். அறிவு வளர்ச்சி சம்பந்தமாய் எனக்குள்ள திடமான அபிப்பிராயம் இது.

டாக்டர் அர்னால்டு

945.படிப்பின் நோக்கம் ஆட்சேபம் செய்தலும், ஆராயாது நம்பிக்கை கொள்ளுதலும், வாதம் செய்தலும் அல்ல. ஆய்ந்து சீர்துக்கித் தீர்மானித்தலே.

பேக்கன்

946.வண்டுக்கு ஏழை முற்றத்திலுள்ள ஒரே செடியில் கூடத் தேன் கிடைக்கும். வண்ணாத்திப் பூச்சிக்கோ அரசர் தோட்டத்தில் கூட அணுவளவு தேனும் அகப்படமாட்டாது.

எட்வர்ட் புல்லக்

947.படிப்பு அறிவிற்கான உபகரணங்களாக மட்டுமே உதவும்; படிப்பதை நமதாக்குவது சிந்தனையே. நாம் அசைபோடும் இனத்தைச் சேர்ந்தவர். விஷயப் பெரும் சுமையை நம்மிடம் திணித்துக் கொண்டால் மட்டும் போதாது. அதை மறுபடியும் சுவைத்தாலன்றி போஷணையும் பலமும் உண்டாகா.

லாக்

948.சிலர் வாழ்நாள் முழுவதும் படிக்கிறார்கள். இறப்பதற்குள் எல்லாவற்றையும் படித்துத் தீர்த்தும் விடுகிறார்கள்-யோசனை செய்வதைத் தவிர.

டோமேர்கு