திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 33 முதல் 34 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஞானிகள் திருச்சட்டத்தை வெறுக்கமாட்டார்கள்; அதைக் கடைப்பிடிப்பதாக நடிப்போர் புயலில் சிக்குண்ட படகுபோல் ஆவர்." - சீராக்கின் ஞானம் 33:2

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 33 முதல் 34 வரை

அதிகாரம் 33[தொகு]


1ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர்க்குத் தீங்கு எதுவும் நேராது;
அவர்களை அவர் சோதனையினின்று மீண்டும் மீண்டும் விடுவிப்பார்.


2 ஞானிகள் திருச்சட்டத்தை வெறுக்கமாட்டார்கள்;
அதைக் கடைப்பிடிப்பதாக நடிப்போர் புயலில் சிக்குண்ட படகுபோல் ஆவர்.


3 அறிவுக்கூர்மை கொண்டோர் திருச்சட்டத்தை நம்புகின்றனர்;
அது அவர்களுக்கு இறைமொழி போன்று நம்பிக்கைக்குரியது.


4 உன் பேச்சை ஆயத்தம் செய்து கொள்;
அப்போது மக்கள் அதைக் கேட்பார்கள்.
நீ பெற்ற நற்பயிற்சியிலிருந்து கருத்துகளை ஒழுங்குபடுத்து;
பிறகு மறுமொழி கூறு.


5 மூடரின் உணர்வுகள் சக்கரம் போன்றவை;
அவர்களின் எண்ணங்கள் சுழலும் அச்சுப் போன்றவை;


6 பொலி குதிரை மீது யார் ஏறிச் சென்றாலும் அது கனைக்கிறது;
எள்ளி நகையாடும் நண்பர்கள் அதைப் போன்றவர்கள்.

ஏற்றத் தாழ்வு[தொகு]


7 ஒவ்வொரு நாளும் ஒரே கதிரவனிடமிருந்து ஒளி பெற்றாலும்
ஆண்டின் ஒரு நாள் இன்னொரு நாளைவிடச் சிறப்பாக இருப்பது ஏன்?


8 ஆண்டவருடைய ஞானத்தால் நாள்கள் வேறுபடுத்தப்படுகின்றன;
அவரே காலங்களையும் விழாக்களையும் வெவ்வேறாக அமைத்தார்.


9 சில நாள்களை அவர் உயர்த்தித் தூய்மைப்படுத்தினார்;
சிலவற்றைப் பொதுவான நாள்களாக வைத்தார்.


10 மனிதர் எல்லாரும் நிலத்திலிருந்து வந்தவர்கள்;
மானிடர் மண்ணிலிருந்து படைக்கப்பட்டனர். [1]


11 நிறைவான அறிவாற்றலால் ஆண்டவர் அவர்களை வேறுபடுத்தினார்;
அவரே அவர்களின் வழிகளை வெவ்வேறாக அமைத்தார்.


12 ஆசி வழங்கிச் சிலரை அவர் உயர்த்தினார்;
சிலரைத் தூயவராக்கித் தம் அருகில் வைத்துக்கொண்டார்.
ஆனால் வேறு சிலரைச் சபித்துத் தாழ்த்தினார்;
அவர்கள் இடத்திலிருந்தே அவர்களை விரட்டியடித்தார். [2]


13 குயவர் கையில் களிமண்போல் -
அவர்களின் எல்லா வழிகளும் அவர்களது விருப்பப்படியே அமைகின்றன. -
மனிதர் தங்களை உண்டாக்கியவரின் கையில் உள்ளனர்;
அவர் தமது தீர்ப்புக்கு ஏற்ப அவர்களுக்குக் கைம்மாறு கொடுக்கிறார்.


14 நன்மைக்கு முரணானது தீமை;
வாழ்வுக்கு முரணானது சாவு;
இறைப்பற்றுள்ளோருக்கு முரணானோர் பாவிகள்.


15 உன்னத இறைவனின் எல்லா வேலைப்பாடுகளையும் உற்று நோக்கு.
அவை இணை இணையாக உள்ளன;
ஒன்று மற்றொன்றுக்கு எதிராய் இருக்கிறது.


16 இறுதியாக விழித்தெழுந்தவன் நான்;
திராட்சைப் பழம் பறிப்போர் விட்டுப்போனவற்றைத் திரட்டியவனைப் போன்றவன் நான்.


17 ஆண்டவரின் ஆசியால் நான் முதன்மை நிலை பெற்றேன்;
திராட்சைப்பழம் பறிப்போர் போலத் திராட்சை பிழியும் தொட்டியை நிரப்பினேன்.


18 எண்ணிப்பார்; எனக்காக மட்டும்நான் உழைக்கவில்லை;
நற்பயிற்சியைத் தேடும் அனைவருக்காகவுமே உழைத்தேன்.


19 மக்களுள் பெரியோர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்;
சபைத்தலைவர்களே, கூர்ந்து கேளுங்கள்.

தன்னுரிமை[தொகு]


20 உன் மகனையோ மனைவியையோ,
சகோதரரையோ நண்பரையோ
உன் வாழ்நாளில் உன்மேல் அதிகாரம் செலுத்த விடாதே;
உன் செல்வங்களை மற்றவர்களுக்குக் கொடாதே.
இல்லையேல் நீ மனவருத்தப்பட்டு அவற்றைத் திருப்பிக் கேட்கக்கூடும்.


21 உன்னிடம் உயிர் உள்ளவரை, மூச்சு இருக்கும்வரை,
மற்றவர்கள் உன்மீது அதிகாரம் செலுத்த விடாதே.


22 நீ உன் பிள்ளைகள் கையை எதிர்பார்த்திருப்பதைவிட
உன் பிள்ளைகள் உன்னிடம் கேட்பதே மேல்.


23 உன்னுடைய எல்லாச் செயல்களிலும் சிறந்தோங்கு;
உன் புகழுக்கு இழுக்கு வருவிக்காதே.


24 உன் வாழ்நாளை நீ முடிக்கும் அந்நாளில், அந்த இறுதி நேரத்தில்,
உன் உரிமைச்சொத்தைப் பகிர்ந்துகொடு.

அடிமைகள்[தொகு]


25 தீவனம், தடி, சுமை கழுதைக்கு;
உணவு, கண்டிப்பு, வேலை அடிமைக்கு.


26 அடிமையிடம் வேலை வாங்கு, நீ ஓய்வு காண்பாய்;
அவனைச் சோம்பியிருக்க விடு, அவன் தன்னுரிமையைத் தேடுவான்.


27 நுகமும் கடிவாளமும் காளையின் கழுத்தை வளைக்கின்றன;
வாட்டுதலும் வதைத்தலும் தீய அடிமையை அடக்குகின்றன.


28 அவனை வேலைக்கு அனுப்பு. இல்லையேல்,
அவன் சோம்பித் திரிவான்.
சோம்பல் பலவகைத் தீங்கையும் கற்றுக் கொடுக்கிறது.


29 அவனுக்கு ஏற்ற வேலையைச் செய்ய அவனை ஏவு;
அவன் பணிந்து நடக்கவில்லையேல்,
கடுமையான விலங்குகளை அவனுக்கு மாட்டு.


30 ஆனால் எவரோடும் எல்லை மீறி நடந்துகொள்ளாதே;
நீதிக்கு மாறாக எதையும் செய்யாதே.


31 உனக்கு ஓர் அடிமை மட்டும் இருந்தால், அவனை உன்னைப்போல நடத்து;
ஏனெனில் அவனை உன் குடும்பத்தானாக வாங்கியுள்ளாய்.


32 உனக்கு ஓர் அடிமை மட்டும் இருந்தால், அவனை உன் சகோதரன் போல நடத்து;
ஏனெனில் உன் உயிரைப்போல் உனக்கு அவன் தேவைப்படுவான்.


33 நீ அவனைக் கொடுமைப்படுத்த, அவன் உன்னை விட்டு ஓடிப்போனால்
எந்த வழியில் அவனைத் தேடிப் போவாய்?


குறிப்புகள்

[1] 33:10 = சாஞா 7:1.
[2] 33:12 = எண் 16:9.


அதிகாரம் 34[தொகு]

கனவுகள்[தொகு]


1 மதியீனர் வெறுமையான பொய்யான நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கனவுகள் அறிவிலிகளுக்குப் பறக்க இறக்கைகள் தருகின்றன.


2 கனவுகளைப் பொருட்படுத்துவோர் நிழலைப் பிடிக்க முயல்வோர்போலும்,
காற்றைத் துரத்துவோர்போலும் ஆவர்.


3 கண்ணாடியில் தெரியும் முகம் வெறும் தோற்றமே;
கனவுகளில் தோன்றுவதும் அவ்வாறே.


4 தூய்மையின்மையிலிருந்து தூய்மை வரக்கூடுமோ?
பொய்மையிலிருந்து உண்மை வரக்கூடுமோ? [1]


5 குறி கூறல், சகுனம் பார்த்தல், கனவுகள் பொருளற்றவை;
பேறுகாலப் பெண்போன்று உள்ளம் கற்பனை செய்கிறது.


6 அவை உன்னத இறைவனின் குறுக்கீட்டால் அனுப்பப்பட்டாலன்றி
உன் மனத்தை அவற்றில் செலுத்தாதே.


7 கனவுகள் பலரை நெறிபிறழச் செய்துள்ளன;
அவற்றில் நம்பிக்கை வைத்தோர் வீழ்ச்சியுற்றனர்.


8 இத்தகைய பொய்மையின்றியே திருச்சட்டம் நிறைவேறும்.
நம்பிக்கைக்குரியோரின் பேச்சில் ஞானம் நிறைவு பெறும்.

பயணம்[தொகு]


9 பல நாடுகளுக்கும் சென்று வந்தோர் [2] பலவற்றை அறிவர்;
பட்டறிவு மிகுந்தோர் அறிவுக் கூர்மையுடன் பேசுவர்;


10 செயலறிவு இல்லாதோர் சிலவற்றையே அறிவர்;
பல நாடுகளுக்கும் சென்று வந்தோர் தங்களது அறிவுடைமையைப் பெருக்கிக்கொள்வர்.


11 என்னுடைய பயணங்களில் பலவற்றைக் கண்டிருக்கிறேன்;
நான் எடுத்துரைப்பதைவிட மிகுதியாகப் புரிந்துகொண்டேன்.


12 பல வேளைகளில் நான் சாவுக்குரிய பேரிடருக்கு உட்பட்டிருக்கிறேன்;
பட்டறிவால் காப்பாற்றப்பட்டிருக்கிறேன்.

இறையச்சம்[தொகு]


13 ஆண்டவருக்கு அஞ்சுவோர் உயிர்வாழ்வர்;
அவர்களது நம்பிக்கை தங்களைக் காப்பாற்றுகிறவர்மேல் இருக்கிறது.


14 ஆண்டவருக்கு அஞ்சுபவர்கள் எதற்கும் நடுங்கவோ தயங்கவோ மாட்டார்கள்;
ஏனெனில் அவரே அவர்களது நம்பிக்கை.


15 ஆண்டவருக்கு அஞ்சுவோர் பேறுபெற்றோர்;
அவர்கள் யாரை நம்புவார்கள்? அவர்களுடைய துணையாளர் யார்?


16 ஆண்டவருடைய கண்கள் அவர்மேல் அன்புகூர்வோர்மீது உள்ளன;
அவரே அவர்களுக்கு உறுதியான பாதுகாப்பு, வலிமைமிக்க துணை,
வெப்பத்தில் மறைவிடம், நண்பகல் வெயிலில் நிழல்;
தடுமாற்றத்தில் ஊன்றுகோல், வீழ்ச்சியில் அரண். [3]


17 அவர் உள்ளத்தை உயர்த்துகிறார்; கண்களை ஒளிர்விக்கிறார்;
நலமும் வாழ்வும் ஆசியும் அருள்கிறார்.

பலிகள்[தொகு]


18 அநியாயமாய் ஈட்டியவற்றினின்று பலியிடுவோரின் காணிக்கை மாசுள்ளது;
நெறிகெட்டோரின் நன்கொடைகள் ஏற்புடையவை அல்ல.


19 இறைப்பற்றில்லாதோரின் காணிக்கைகளை உன்னத இறைவன் விரும்புவதில்லை;
ஏராளமான பலி செலுத்தியதற்காக அவர் ஒருவருடைய பாவங்களை மன்னிப்பதில்லை. [4]


20 ஏழைகளின் உடைமையிலிருந்து பலி செலுத்துவது
தந்தையின் கண்முன்னே மகனைக் கொலை செய்வதற்கு இணையாகும்.


21 எளிய உணவே ஏழைகளுக்கு உயிர்;
அதை அவர்களிடமிருந்து பறிப்பவர்கள் இரத்த வெறியர்கள்.


22 அடுத்தவர் பிழைப்பைக் கெடுப்பது அவர்களைக் கொல்வதாகும்;
கூலியாளின் கூலியைப் பறிப்போர் அவர்களது குருதியையே சிந்துகின்றனர்.


23 ஒருவர் கட்ட, மற்றொருவர் இடித்தால்,
கடின உழைப்பைத் தவிர வேறு என்ன பயன் கிட்டும்?


24 ஒருவர் மன்றாடுகையில் மற்றொருவர் சபித்தால்
யாருடைய குரலை ஆண்டவர் கேட்பார்?


25 பிணத்தைத் தொட்டவர் குளித்தபின் மீண்டும் அதைத் தொடுவாராயின்,
அவர் குளித்ததால் பயன் என்ன?


26 தங்கள் பாவங்களுக்காக நோன்பிருப்போர் வெளியில் சென்று,
மீண்டும் அதே பாவங்களைச் செய்தால், யார் அவர்களது வேண்டுதலைக் கேட்பர்?
அவர்கள் தங்களைத் தாழ்த்திக் கொள்வதால் பயன் என்ன?


குறிப்புகள்

[1] 34:4 = யோபு 4:4.
[2] 34:9 - "நற்பயிற்சி பெற்றோர்" எனச் சில சுவடிகளில் காணப்படுகிறது.
[3] 34:16 = திபா 33:18.
[4] 34:18-19 = நீமொ 15:18; 21:27.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 35 முதல் 36 வரை