பக்கம்:திருவாசகத்தேன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 73

போகிறது. பின் காலம் செல்லச் செல்லப் பட்டறிவின் வழியில்தான் மனச்சாட்சி அங்கீகரிக்கப்பெறுகிறது. அவ்வழி நடக்கும் வாழ்க்கையும் தொடங்குகிறது. இதுவே சமய வாழ்க்கையின் தொடக்கம்.

இந்த நிலைக்கு உயிர்கள் வரும் வரையில் இறைவன் உயிர்களைக் கைவிடமாட்டான்! உயிர் செய்யும் துரிசுகளுக்கு உடந்தையாக இருந்து உடன்போய் பிழைகளைப் பொறுத்தாள்வான். பின் பிழைகளைத் தவிர்க்கவும் கற்றுத்தந்து, பிழைகளைத் தவிர்த்து வாழும் வாழ் நிலையை அருள்வான். ஆணவத்துடன் இரண்டறக்கலந்து முனைப்புடன் வாழும் உயிர்களை- பிழை காணாது பால் கறக்கும் சிலர் பிழுக்கையை ஒதுக்கிப் பாலினைக் கொள்வதைப் போல ஆட்கொண்டருள்வான். சிறியோர் செய்த பிழையெல்லாம் பொறுக்கும் டெரியோன் இறைவன்.

உயிர்க்கு வாழ்க்கைக்குரிய முதல் எது? முதல்தொடக்கம் என்றும் பொருள் கொள்ளலாம். மேலும். உயிர் வாழ்க்கைக்குரிய ஆக்கங்கள் அனைத்தையும் வழங்கிய முதல் என்றும் பொருள் கொள்ளலாம். ஆம்! உயிர் என்றுமுளது; உயிர் இயல்பிலேயே ஆணவத்துடன் அத்துவிதமாக முடங்கிக் கிடக்கிறது; அறிவியக்கத்திற் குரிய வாயில்கள் இருந்தும் ஆண்வத்தின் கூட்டால் செயலடங்கி முடங்கி மூலையில் கிடக்கிறது. அப்போது இறைவனின் திருவருள் நோக்கம் உயிரின்பால் வீழ்கிறது. அதுவே வாழ்க்கையின் முதல் தொடக்கம்! உயிர்க்கு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அறிவுக் கருவிகள் அடங்கிய நுண்ணுடல் கிடைக்கிறது. நுண்ணுடல் கிடைத்தவுடன் உயிர்க்கு வாழ்க்கை தொடங்குகிறது; தொடர்கிறது. இந்தத் தொடக்கத்திற்குப் பின் உயிர் செய் கருவிகளடங்கிய பரு உடலைப் பெற்றோர்வழி பெற்று மண்ணில் பிறப்பினைப் பெறுகிறது. இந்தப் பிறப்பில்