பக்கம்:குமண வள்ளல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

குமண வள்ளல்

விழுந்தது; அதுவும் அவர் உள்ளத்தை அலைத்துக் கொண்டிருந்தது. அதிகமானிடம் அவர் ஒரு முறை சென்று தக்க பரிசுகளைப் பெற்றிருக்கிறார். அவனைக் கண்டபோது நிகழ்ந்த நிகழ்ச்சி புலவருக்கு இப்போது நன்றாக நினைவுக்கு வந்தது. அன்றுதான் அதிகமானுடைய பெருந்தன்மையைப் பெருஞ்சித்திரனார் உணர்ந்துகொண்டார். முதலில் அவர் அவனைச் சிறந்தவனாகக் கருதவில்லை; அவனிடம் அவருக்குக் கோபம் உண்டாயிற்று. ஆனால் அவருடைய கோபம் பின்பு நன்மையே விளையச் செய்தது.

தகடூர் நெடுந்துாரத்தில் உள்ள ஊர். அதற்குப் போகவேண்டுமானால் மலையடர்ந்த பகுதிகளைக் கடந்து செல்லவேண்டும். இப்போது சேலம் மாவட்டத்தில் உள்ள தர்மபுரி என்ற ஊரின் பழைய பெயர்தான் தகடூர் என்பது. தர்மபுரிக்கு அருகில் இன்றும் அதிகமான் கோட்டை என்ற இடம் இருக்கிறது. அங்கேதான் சிற்றரசனாகிய அதிகமான் வாழ்ந்து வந்தான். நெடுநாள் வாழும்படியாகச் செய்யும் நெல்லிக் கனியை ஒளவையாருக்கு வழங்கி அப்பெருமாட்டியாரின் பாடலைப் பெற்றுத் தமிழுலகம் முழுவதும் புகழும் உயர்நிலையை அடைந்தவன் அவன்.

பெருஞ்சித்திரனார் அவனை நாடிச் சென்றார். அவர் போன சமயம், பெருஞ்சேரலிரும்பொறை போர் செய்ய வரக்கூடும் என்ற செய்தி அதிகமானுக்கு ஒற்றர் மூலமாக எட்டியிருந்தது. ஆதலின், தன்னுடைய நண்பர்களோடும் அமைச்சர்களோடும், போர் நேர்ந்தால் என்ன் செய்வது என்ற ஆராய்ச்சியில் அவன் ஈடுபட்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/8&oldid=1358880" இலிருந்து மீள்விக்கப்பட்டது