பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. கிழவியின் தந்திரம்

சிவகங்கைச் சம்ஸ்தானத்தில் மருது சேர்வைக்காரர் என்ற ஜமீன்தார் ஆட்சி புரிந்து வந்தார். வீரத்திலும் கொடையிலும் புலவர்களைப் போற்றும் திறத்திலும் அவர் சிறந்து விளங்கினார். அதனால் அவரை ஒரு சிற்றரசராக எண்ணாமல் முடியுடை மன்னராகவே எண்ணி அவரைப் பாராட்டினார்கள் மக்கள். அவரை மருது பாண்டியர் என்றே அழைத்தார்கள். வேறு சிலரும் மருது என்ற பெயருடன் அந்த சமஸ்தானத்தை ஆண்டதுண்டு. அவர்களுக்குள் வேற்றுமை தெரிவிப்பதற்காகக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியே அடையாளச் சொல் கூட்டிக் குறிப்பிட்டு வந்தார்கள். பெரிய மருது, சின்ன மருது, வெள்ளை மருது என்று வேறுபாடு தோன்றும்படி பேச்சு வழக்கில் பேசி வந்தார்கள்.

இந்த மருது பாண்டியர்களில் ஒருவராகிய வெள்ளை மருது, புலவர்களிடத்தில் அன்பு பூண்டு என்றும் குன்றாத புகழைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை அவர் அறிந்திருந்தார்.