பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20 நல்வழிச் சிறுகதைகள்

கிறார்களே! யாராவது கண்ணன் என்ன ஆனான் என்று எட்டியாவது பார்த்தார்களா?

உடல் நலமடைந்தவுடன் கண்ணன் நமசிவாயத்தைப் போய்ப் பார்த்து வரச் சென்றான். அவர் அவனை அன்போடு வரவேற்றார். எப்படியிருக்கிறான், என்ன வருவாய் கிடைக்கிறது என்றெல்லாம் கேட்டார். கடைசியில் அவர் அவனைக் கடிந்து பேசினார்.

கண்ணா, நீ செய்வது சரியில்லை. உன் அன்றாடத் தேவைக்கு அதிகமாகவே உனக்குக் கூலி கிடைக்கிறது. கிடைக்கும் பணம் முழுவதையும் நீ செலவழித்து விடுவது சரியில்லை. பணம் சேமித்து வைக்க வேண்டும்; சொல்லப் போனால், உன் செலவுகளைக் குறைத்து அதிகப் பணம் சேமித்து வைப்பதே நல்லதென்பேன்!” என்று நமசிவாயம் கூறினார்.

அவருடைய சொற்கள் கண்ணன் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. அவர் தன் நன்மைக்காகத் தான் கூறுகிறார் என்று கண்ணன் தெரிந்து கொண்டான். அன்று முதல் அவன் பணம் சேமிக்கத் தொடங்கினான். ஓராண்டுக்குப் பிறகு அவன், தான் சேமித்து வைத்த பணத்தை எண்ணிப் பார்த்த போது அவனுக்கே வியப்பாயிருந்தது. இன்னும் நான்கைந்து ஆண்டுகள் சென்றால் நானே பெரிய பணக்காரன் ஆகிவிடுவேன் போலிருக்கிறதே! நமசிவாயத்தின் வழி நல்ல வழிதான்!” என்று தனக்குள் கூறிக்கொண்டான்.