பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் .35

இரண்டு பேரும் தோள் தட்டித் தொடை தட்டி ஆர்ப்பரித்துப் பாய்ந்தனர். ஒருவரை யொருவர் கையினால் பிடித்துக் கையை முறுக்கினர். தோளிலே தோளை யழுத்திச் சாய்க்க முயன்றனர். கட்டிக் கொண்டு புரண்டனர்.

கட்டி புரளத் தொடங்கியவுடன் இடுப்பில் பல ஊசிகள் குத்துவதைப் போல் உணர்ந்தான் திண்ணன். வலி தாளாமல் பிடி நழுவியவுடன் திண்ணனைக் கீழே தள்ளிச் சாய்த்து விட்டான் அந்தப் பயில்வான். தவறான ஆட்டம் என்று சொல்லத் திண்ணன் வாய் திறக்கு முன் அந்தப் பயில்வான் தன் கையைத் திண்ணனுடைய வாய்க்குள் திணித்து அவனைப் பேச விடாமல் செய்து விட்டான்.

திண்ணன் கீழே சாய்ந்துவிட்டதை-அவ்வளவு விரைவில் சாய்ந்து விட்டதைக் கண்டு உள்ளுர் மக்கள் வந்திருந்தனர். நல்லதொரு பந்தயத்தைப் பார்க்க வந்த பலர் சப்பென்று போன இந்தப் போட்டியைக் கண்டு ஏமாற்றமடைந்தனர். தீயவர்கள் சிலரோ, திண்ணன் சாய்ந்ததைப் பெருவெற்றியாகக் கருதிச் சீட்டியடித்துக் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

அயலூர்ப் பயில்வானே வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவனுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

திண்ணன் என்றுமில்லாத அவமானத்துடனும், குன்றிய மனத்துடனும் வீட்டுக்குத் திரும்பினான்.