பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 87

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” என்று கூறு கின்றார். இதனால், திருவருள் ஞானம் பெறுதற்கு உடம்பு பெருங் கருவியாவது தெற்றென விளங்கும்.

உடம்பு, ஊன், உயிர், உணர்வு என்ற மூன்றுக்கும் உறைவிடம் அருள் ஒளி பெறுதற்குரியது உயிருணர்வாயினும், அதற்கு ஊனுடம்பு கொள்கல மாதலின், அதுவும் அருள் ஒளி நிறைதல் வேண்டும். ஊனும் உயிரும் உணர்வும் அருளில் தோய்ந்து ஒன்றாயினன்றி உண்மை ஞானம் கைவர முடியாது. இதனை நாவரசர், “ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகிப் பிற அனைத்தும் நீயேயாகி, நான் ஏதும் அறியாதே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்” என்று உரைக்கின்றார். உயிர் உணரும் தன்மைத்தாயினும் உணர்வு இருக்குமிடம் உயிரே என்பது தோன்ற “உயிராகி அதனுள் நின்ற உணர்வாகி” என்று சுட்டிக் காட்டுகின்றார்.

இங்ஙனம் ஊனும் உயிரும் உணர்வுமாயினும் திருவருள் அவ்வாறு ஆவது உயிருணர்வால் அறியப் படுவதில்லை; உடம்பிற்குள் உடன் உறையினும், அதன் கண் உருவாகும் நோய், உயிருக்குத் தெரிவதில்லை; அதுபோலத் திருவருளின் தோய்வும் உயிருக்குத் தெரியாது போகிறது. அது விளங்குதற்கே “நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து” என்றும், உடலினுள் தோன்றிய நோய் விளைவிக்கும் துன்பத்தால் அதன் உண்மை வெளிப்படுவது போல,