பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 329

மண்கொணட பூதலவிர வீரமார்த்தாண்ட மாற வர்மன் எனப்படுவான். இவன் தன் பெயரால் நெல்லைத் திருக்கோவிலில் வீரமார்த்தாண்ட மண்டபம் என்றொரு மண்டபத்தை நிறுவினான். சோபான மண்டபம் ஒன்றைக் கட்டுவித்தான். அதுவே இன்று சோமவார மண்டபம் என்று வழங்கப்படுகின்றது. இம்மன்னன் காலத்தில்தான் நெல்லைத் திருக்கோவிலில் அறுபத்து மூவர் திருவுருவங்கள் வெண்கலத்தால் அமைக்கப்பெற்றன என்று கல்வெட்டொன்று சொல்கின்றது.

இவன் காலத்தில் நெல்லையில் சமயப் பணி யாற்றும் திருமடங்கள் இரண்டு சிறப்புறத் திகழ்ந்தன. தெற்குத் தேர்த்தெருவில் சேக்கிழார் மடமும், வடக்குத் தேர்த்தெருவில் மெய்கண்டார் மடமும் விளங்கின. சேக்கிழார் மடத்தில் இருந்து பயின்றவரே மெய்கண்டார் மடத்துக்குத் தலைவராய் வருதற்குத் தகுதி பெறுவர். அத்தலைவரின் தீக்கைப் பெயர் ‘சத்தியஞான தரிசினி’ என்பதாகும். சத்தியஞான தரிசினி யென்பது மெய்கண்டாரைக் குறிக்கும் திருப்பெயரே. இச்செய்தியை நெல்லைக் கோவில் கல்வெட்டொன்று சுட்டுகின்றது.

இங்ஙனம் மன்னரும் செல்வரும் கோவில் களையும் மடங்களையும் நிறுவி, அவற்றின் வாயிலாகச் சமயப்பணியும் கலைப்பணியும் ஆற்றி வந்தனர். கோவில்களில் மக்கட்குச் சமய ஞானம் நல்கும் வியாக்கியான மண்டபங்கள் விளங்கின.