பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 53

ஆங்கிலமொழியின் ஏற்றத்தால் நாட்டு மொழி நூல்கள் பல பேணுவாரின்றி யொழிந்ததுபோல, அக்காலத்தே வடமொழி யேற்றம் பெற்றதனால், சைவத் தமிழ் நூல்கள் பல மறைந்தன. தமிழில் எழுந்த சிவஞானபோதம் வடமொழி ரெளரவாகம மாகியதும் இக்காலத்தேயாம். -

பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தே கொற்றவன்குடி உமாபதிசிவனார் முதலிய சான் றோர் தோன்றிச் சிவப்பிரகாசம் முதலிய நூல்களால், சிவஞானபோதம், சிவஞான சித்தியென்ற தமிழ் நூல்களை முதலாகக் கொண்டும் சைவாகமங்களைத் துணையாகக் கொண்டும் இன்றைய சைவ சித்தாந்த சமயத்தை உருப்படுத்தித் தருவாராயினர். இவ்வாறே வடமொழியிலுள்ள ஆகமங்களுட் சிலவற்றிற்கு வடமொழியில் உரைகள் காணப்பட்டன. வடமொழி யாளர்க்குள்ளேயும் சங்கர வேதாந்தத்தைப் பின் பற்றினோர் தொகை மிகுவதாயிற்று. அவர்கள் வேதாந்தமெனப்படும் உபநிடதங்களையும் வியாசர் பாரதத்துட் கூறிய பகவற் கீதையையும் துணையாகக் கொண்டு சிவாகமங்கள் பிரமாணமாகா என வாதம் புரியவே, சைவ சித்தாந்த நெறி நிற்போர், சிவாக மங்களும் பிரமாணமே என நிலைநாட்டும் கடமை யுடையராயினர். “வேதசாரம் இதம் தந்த்ரம் சித்தாந்தம் பரமம் சுபம்” என மகுடாகம முதலாயின கூறலாயின. இவ்வகையில் சைவ சித்தாந்த நெறி பழமையும் புதுமையும் கலந்து செவ்விய வகையில் தமிழகத்தில் நிலைபெறுவதாயிற்று.