பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 : ஒளவை சு. துரைசாமி

முதலிய எல்லாத் துறைகளும் மக்கள் வழங்குகின்ற மொழியிலேயே இயங்க வேண்டும் என்ற வேட்கை மீதுர்ந்திருக்கும் இந்நாளில் தமிழருள் சிலர் மொழி வெறி கொண்டு தாம் சமய வழிபாட்டில் செய்து வரும் பெரும் பிழையைத் திருத்திக் கொள்ளாமல் விடாப்பிடியாக இருப்பது சமய வளர்ச்சிக்கு ஆதரவு தருவதாகத் தோன்றவில்லை. வடமொழியறிஞர்க்கும் வெறுப்பைத் தந்து நாட்டு மக்களுக்கு இருளை விளைவித்துச் சமய உணர்வொழுக்கங்களில் மக்கள் உள்ளத்தில் புறக்கணிப்பை நல்கும் இப்பிழைபட்ட வழிபாட்டு முறையைச் சமய நிலையங்கள் இனியும் நீடிக்க விடுவது அறமாகாது. மேலும் வடமொழி ஆகமங்களோ தமிழ்ச் சமய இலக்கியங்களோ யாதும் எக்காலத்தும் எவ்விடத்தும் வடமொழியில்தான் வழிபாடு நடைபெற வேண்டுமென்ற விதியை வகுத்ததே கிடையாது. வாழ்க்கைத் துறையில் தான் போலிச் செயல் பெருகிற்றென்றால் வழிபாட்டிலும் போலியுரை வளருமானால் தெய்வங்களின் அருள் தான் கைவருமோ என்று உள்ளம் அஞ்சுகின்றது. தெய்வந்தான் துணைசெய்ய வேண்டும்.

தமிழர் வாழ்வு (கட்டுரைத் தொகுப்பு) மதுரைத் தமிழ்ச் சங்கம், மதுரை, (மே, 1967)