பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 ஒளவை சு. துரைசாமி

ஆதலின், தென்பாண்டி நாட்டில் மக்கள்பால் மனமொழி மெய்மூன்றினும் சைவமணம் கமழ்ந்த காலம் அது. இத்தகைய நலங்கள் நிறைந்த காலத்தில்தான் ஞானசூரியனைப் போலக் குமரகுருபரர் திருவவதாரம் செய்தருளினார். பிறந்த குழந்தை அழுகிறது; ஆனால் ஒசையில்லை. ஐந்தாண்டு வரைக்கும் ஊமையாகவே யிருந்து செந்தில் கந்தவேள் கருணையால் வாய்திறந்து பேசலுற்றார். வாயினைத் திறக்கும்போதே முருகா எனத் திறந்தார். முருகன் திருவருளால் திருவாய் திறக்கப்பெற்ற குமரகுருபரர், முருகன்மீது மனமுருகிப் பாமாலை தொடுத்தார். முதன்முதல் அவர் பாடியது கந்தர் கலிவெண்பா’ என்னும் செந்தமிழ்ச் சிறுநூலாகும். ஐந்தாண்டுப் பருவத்தில் அருங்கவிதை பாடினார் என்று சொல்லுதல் எங்ஙனம் பொருந்தும்?

சீர்காழியில் தோன்றிய ஞானசம்பந்தர் மூன் றாண்டுப் பருவத்தில் முத்தமிழ்ப் பாடல் இசைக்க வில்லையா? இரண்டாண்டுப் பருவத்தில் மெய் கண்டார் திரண்ட சித்தாந்த உண்மைகள் பொதிந்த சிவஞான போதத்தைச் செப்பவில்லையா? அகத்தியர் அருள் வரத்தால் உதித்தருளிய சிவஞான முனிவர் ஐந்தாம் ஆண்டில் செந்தமிழ்ப் பாடல் பாடவில்லையா? இன்றும் பர்மாவிலே நாலாண்டுக் குழந்தையொன்று பெருங் கணக்குகளையெல்லாம் சொல்லியவுடனே விடை பகர்கின்றதே! இவை யெல்லாம் அரிதில் வாய்க்கப் பெற்ற திறங்கள்.