பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 233

துறவு வாழ்வு முதிர முதிரப் பிள்ளையார்க்கு உலகியலின் பல் வகைக் கூறுகளையும் பகுத்து ஆராயும் ஆராய்ச்சி மிகுவதாயிற்று. யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை, இளமை நிலை யாமை முதலிய நிலையாமைகளை ஏனைத் துறவி களைப் போலவே கூறுகின்றாராயினும், மக்க ளுடைய செயல் வகைகளைத் தொகுத்து வகுத்தும் ஆராய்ந்த முதன்மை நம் பட்டினத்தாருக்கே உரியது. இளமை, மூப்பு, இறப்பு என்றவற்றின் விரைந்த வரவை யெடுத்தோதி, இவற்றையுடைய உடல் வாழ்வைக் கருதி மக்கள், செய்தன. சிலவே செய்யா நிற்பன சிலவே’ எனவும், அவற்றிடை நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே, ஒன்றினும் படாதன சிலவே’ எனவும், இவற்றை ஒன்றொன்றாக நோக்கினும், ஒன்றாகச் சேரத் தொகுத்து நோக்கினும், உண்மை தெளிதல் மனத்திற்கு இயலுவதில்லை யாதலால், மனத்தின் செய்கை மற்றிதுவே (கோயில். 32) எனவும் கூறுவது இதற்குப் போதிய சான்றாகும். இவ்வாறே உயிர்கள் பலவாய்த் தம்முள் பல வேறு வகையால் ஒன்றினொன்று ஒவ்வாத வேற்றுமை கொண்டு நிலவுவதை யாக்கையி லியங்கும் மன்னுயிர், உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும், திருவினும் திறலினும் செய்தொழில் வகையினும், வெவ்வேறாகி வினையொடும் பிரியாது, ஒவ்வாப் பன்மை (ஒற்றி.4) என ஆராய்ந்து வகுத்துக் காட்டுவர்.