பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 265

இவர் பெயர் பெருமாக் கோதையென்பது. சிவ வழிபாட்டில் இவர் இளமை முதலே ஊன்றிய உறுதி படைத்தவர்; செங்கோற் பொறையன் என்னும் சேர வேந்தனுக்குப் பின் சேரநாட்டிற்கு முடியுடை மன்னரானவர்; சிவபெருமான் அன்பராகிய பாணபத்திரர் பொருட்டுத் திருமுகம் விடுக்கப் பெற்றவர்; சிவபெருமான் திருவருள் காட்டத். திருவாரூரையடைந்து ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமி களைக் கண்டு அவரோடு பிரியா நட்புற்றவர். இந்நட்பின் பெருமை மிக்க சிறப்பானது. இதனைப் பின்னர்க் கூறுகின்றாம். இவர், சுந்தரமூர்த்திகளைத் தம் சேரநாட்டிற்கு அழைத்துச் சென்று பல நாள் தம்மோடு இருத்தி அவர்க்குப் பணிசெய்யும் பேறு பெற்றவர்; மறுபடியும் அச் சுந்தரமூர்த்திகள் தாமே தம் நாட்டிற்கு வந்து பரமன் விடுத்த வெள்ளானை மீது கயிலைக்குச் செல்வதுணர்ந்து, அவர் யானைக்கு முன் தம் குதிரைமீதேறிக் காவல்புரிந்து செல்லும் கழிநலம் பெற்றார்; கயிலையையடைந்து சிவ பெருமான் திருமுன் தாம் பாடிச் சென்ற திருவுலாப் புறத்தை அரங்கேற்றிச் சிவகணங்கட்குத் தலைவராம் செம்மை நிலை எய்தியவராவர்.

இனி, இவர் பாடியருளிய பிரபந்தங்கள் மூன் றாகும். அவை பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கயிலாய ஞானவுலா என்பன. இவற்றுள் பொன்வண்ணத் தந்தாதி, தில்லையில் பாடி நடராசப் பெருமான் திருப்படிக்