பக்கம்:நாலு பழங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிசயப் பெண்

33

அந்த அழகியைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று பணக்காரப் பிள்ளைகள் ஆசைப் பட்டார்கள். அரச குமாரர்கள் விரும்பினார்கள்.

வித்தியாதரரோ சிறந்த அறிவாளி ஒருவனுக்கு அவளை மணம் செய்துவைக்க வேண்டுமென்று விரும்பினார். ஆகையால் யாராவது அவரிடம் வந்து பெண் கேட்டால், "இவளுடைய அழகைக் கண்டு ஏமாந்து போகாதீர்கள். இவளுடைய சுபாவத்தை நான் எடுத்துச் சொன்னால் நீங்கள் இவளை விரும்ப மாட்டீர்கள்" என்று சொல்வார். தகப்பனாரே இப்படி வெளிப்படையாகச் சொன்னால் அதைக் கேட்டவர்கள் துணிந்து எப்படிக் கல்யாணம் செய்து கொள்ள முன் வருவார்கள்?

ஒரு நாள் ஒருவன் வந்தான். பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வந்ததாகச் சொன்னான். வித்தியாதரர் வழக்கம் போல், "அவள் சுபாவம் உனக்குப் பிடிக்காதே!" என்றார்.

"அவள் சுபாவம் என்ன? சொல்லுங்கள்" என்றான்.

உடனே அவர். "அதை ஏன் அப்பா கேட்கிறாய்? ஒன்றா? இரண்டா? அவளைச் சமையல் செய்யச் சொன்னால் கல்லைப் போட்டுச் சமைப்பாள். நீ அதைப் பொறுத்துக் கொள்வாயா?" என்று கேட்டார்.

வந்தவன் பேசாமல் போய்விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/39&oldid=1084874" இலிருந்து மீள்விக்கப்பட்டது