பக்கம்:திருவாசகத்தேன்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தோன்றலாம். இது பரிணாம வளர்ச்சி. நிறையிலிருந்து குறை தோன்றாது. ஆன்மாக்களுக்கு உள்ள குறைகளை நோக்கின் கடவுள் படைத்திருப்பான் என்று சராசரி அறிவு கூட ஒத்துக் கொள்ளாது. ஆதலால் உயிர்களுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. உயிர்கள் என்றும் உள்ளவை (Existence) “எல்லா உயிர்க்கும் தோற்றமாம்” என்பதற்குப் பொருள் கொண்டதுபோல, மறைவாகச் செயலின்றிக் கிடந்தவை, செயலுக்குரிய் அறிவுக் கருவிகளையும் செயற்கருவிகளையும் பெற்று இயக்கத்திற்கு வருவதே தோற்றம்.

 “மூலையிலே கிடந்தேனை”

என்றார் திருமூலரும். உயிர்களுக்கு முடிவும் இல்லை. அப்படியானால் உயிர் வாழ்க்கைக்கு முடிவே இல்லையா? முடிவில்லாமல் இருந்தால், எய்ப்பும் களைப்பும் வந்து விடும். உயிர்களின் வாழ்க்கைக்கு எல்லை இறைவன் திருவடிகளைச் சார்தலேயாம். இந்த நிலையிலும் சமயங்கள் தம்தம் நிலையில் மாறுபடும், உயிர்கள் திருவடி ஞானப் பெறச் சிவத்தினை அடைந்து திருவடி இன்பத்தை அடைதலே உயிர்களின் வாழ்க்கைக்கு முடிவு. அப்படியானால் திருவடிகளில் உயிர்கள் கலப்பதன் மூவம் தன்னை இழந்து விடுகின்றனவா? இல்லை! உயிர்கள்- ஆன்மாக்கள் திருவடியின்பத்தில் தன்னை இழந்துவிட்டால் முன் சொன்ன உண்மைக்கு மாறாகிவிடும். அதாவது உயிர்களுக்கு- ஆன்மாக்களுக்கு அழிவு இல்லை என்பதற்கு மாறாகி விடும். உயிர்கள் தன்னை இழத்தல், சிவத்துடன் சேர்ந்து தன்னை இழத்தல் என்பது பொருளால் இரண்டாகவும் தன்மையால் ஒன்றாகவும் விளங்குவதேயாம். தன்னை இழத்தல் என்பது தற்போத மிழத்தவேயாகும்; பாலொடு நீர் கலந்தது போல! பாலைக் காய்ச்சினால் தண்ணீர் நீராவியாகிவிடும். அது போலப் பாலொடு நீர் கலந்த நிலைதான் சிவத்தொடு ஆன்மா கலந்த நிலை.