பக்கம்:திருவாசகத்தேன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பிணக்கிலாப் பெருவாழ்வு

னித வாழ்க்கையைத் துன்பமயமாக்குவது பிணக்கு. நம்பிக்கையும்- நல்லெண்ணமும் பயிலாத நெஞ்சில் பிணக்குத் தோன்றுகிறது; அல்லது தோன்றும். வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு- ஒப்புக்கொண்டு மேவிய அன்புடன் வாழும் திறம் இல்லையானாலும் பிணக்குத் தோன்றும். பிணக்கு பகைக்கு வித்திடும். பிணக்கு வாழ்க்கையில் அமைதியைச் சீர்குலைக்கும். கெட்ட போரிடும் உலகம் தோன்றுவதே பிணக்கினால்தான்.

பிணக்கு வீட்டிலும் தோன்றும்; சமூக அளவிலும் தோன்றும். பிணக்கின் வளர்ச்சியே வேந்தலைக்கும் கொல் குறும்பு! பிணக்குகளைத் தவிர்த்து வாழ்தலே. சிறப்பு. 'நான்', 'எனது' என்ற செருக்குகளை அகற்றினால் பிணக்குகள் தோன்றா!

ஆற்று வெள்ளத்தில் 'சுழி' தோன்றும். இச்சுழியில் சிக்கியோர் எவரும் தப்புதல் அரிது. அதுபோலவே மனிதனும் சாதி, குலம் என்னும் சுழிகளில் சிக்கிக் கொள்ளுதல் அறியாமையேயாம். 'நான்', 'எனது' என்ற உணர்வு செத்தால்தான் ஆன்மா உய்திநிலையை எய்தும். இந்த உலகில் துன்பங்கள் பலவானாலும் அவற்றிற்குரிய காரணங்கள் இரண்டேயாம். ஒன்று உடல் சார்ந்த 'நான்' என்ற அகங்காரம். மற்றொன்று உடைமை சார்ந்த, 'எனது' என்ற மமகாரம். 'நான்', 'எனது' என்ற விருப்பங்-