பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166சீவக சிந்தாமணி



அறியாமலேயே பாசம் சிறிது குறைந்தவனாகக் காணப் பட்டான். வளர்ந்து விட்டவன்; அதனால் ஏற்பட்ட மாறுதல் என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

மூத்த மகன் என்பதால் அவனுக்குத் தனி மரியாதை, அந்த மரியாதை கந்துக் கடனால் சீவகனுக்கு அளிக்கப் பட்டது. தத்தை ஆரவாம் செய்யாமல் தன் மகிழ்ச்சியை அவள் அணிந்திருந்த புத்தாடையிலும் அணிகளிலும் காட்டினாள். மணப்பெண் போலக் காட்சி அளித்தாள். வீட்டைப் பெருக்கிக் கோலமிட்டுச் சீர் செய்து அழகு காட்டினாள். நாமகள் என்று சொல்லும்படி அவள் நா இனிய சொற்களை மிழற்றிக் கொண்டு இருந்தன. வந்தவர்களை வருக என்று கூறி அளவோடு சிரித்து அகமகிழ வைத்தாள்.

குணமாலை சந்திக்கத் தத்தை வாய்ப்பு அளித்தாள்.

“என்னால் தான் உங்களுக்கு இந்த விளைவு” என்று வளைத்துப் பேசினாள் அவல அழகி.

“உன்னால் தான் இவ்வளவும்; நான் அடைந்த சிறப்புகளுக்கே நீ தான் காரணம். கட்டியங்காரன் என்னைச் சிறைப் பிடிக்க முயலாவிட்டால் நான் என் தாயைக் கண்டிருக்க முடியாது. புதுப் புது மலர்களைப் பறித்து அழகு பார்த்து இருக்க முடியாது. படைவன்மை மிக்கவனாக வளர்ந்திருக்க முடியாது” என்று கூறினான். “அதனால் உன்னை மிகவும் மதிக்கிறேன். துன்பத்தைத் துடைப்பதற்கு எழுகின்ற போராட்டம் தான் வாழ்க்கையின் உயிர்த் துடிப்பு” என்றான்.

அவள் நாள் ஒற்றித் தேய்ந்த விரலைப் பார்த்தான்; சித்திரம் எழுதும் கோல் போல் அது தேய்ந்து கிடந்தது.

“உங்களை நினைத்து ஒவியம் எழுதிக் கொண்டிருந்தேன்” என்றாள்.