பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

இரண்டு அடிகளைப் பாடியவுடன் மதுரைப் புலவர் கையைக் காட்டினார்.

“புலவரே நிறுத்துங்கள். இந்தப் பாடல் யாருடைய புகழைச் சொல்வது?” என்று கேட்டார்.

“ஏன்? இதுகூடத் தெரியவில்லையா? எங்கள் சோழ மன்னனுடைய புகழைத்தான் சொல்கிறது. அவன் புறமுதுகு காட்டாத பெரிய வீரன் என்பதை விளக்குகிறது” என்றார் சோழ நாட்டார்.

“இந்த இரண்டு அடிகளில் அப்படி இல்லையே! உங்களுடைய சோழ மன்னன் முதுகுக்குக் கவசம் இடுவதில்லை என்பதுதானே இருக்கிறது” என்று கேட்டார் புலவர் தலைவர்.

“ஆம், அதற்குக் காரணம் அவன் புற முதுகு காட்டாத வீரன் அன்றோ ? இந்த இரண்டு அடிகளிலிருந்தே அதை ஊகித்துக் கொள்ளலாமே. பாட்டு முழுதும் சொல்வதற்கு முன்பே இந்தப் பொருள் குறிப்பாகப் புலப்படுகிறதே” என்றார் சோழ நாட்டுப் புலவர்.

“இல்லை இல்லை! இந்த இரண்டு அடிகளிலே சோமன் புகழ் வெளிப்படவில்லை, சோழனுக்கு இகழ்ச்சியாகக் கூடப் பாட்டை முடிக்கலாம்” என்றார் மதுரைப் புலவர்.

இப்படி அந்தப் புலவர் சொன்னதும் சோழ நாட்டுப் புலவருக்குச் சினம் மூண்டது. “பாட்டில் வெளிப்படையாகச் சோழனது பெருமை விளங்குகிறது. நீங்கள் காக்கை வெள்ளை என்பது போலப் பேசுகிறீர்களே!” என்றார்.