பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

“இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தப் பக்கங்களில் பஞ்சம் வந்தது போதிய தண்ணீர் இல்லாமல் நெற் பயிர்கள் சரியாக விளையவில்லை. முன்பே இருக்கிறதைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு செட்டாக வாழ வேண்டி இருந்தது. அப்போது மற்றப் பணக்காரர்கள் தங்கள் வீட்டுவாசல்களை அடைத்துக் கொண்டிருந்தார்கள் இந்தப் புண்ணியவானோ எப்போதும் போல் வருபவர்களை வரவேற்றார். இவர் சாப்பிட்டாரோ, இவர் மனைவி சாப்பிட்டாளோ, நான் அறியேன். ஊரெல்லாம் திண்டாடும் அந்தச் சமயத்திலும் தம்மை நாடிவரும் புலவர்களுக்கு ஒரு வேளையாவது சோறு போட்டு அனுப்பிக் கொண்டி ருந்தார். அப்போது இவரை நாங்கள் தெய்வப் பிறவி என்றே நினைத்தோம்” என்றார் அவர்.

ஔவையார், “இவரைப் பாட வேண்டும் என்று சொல்கிறீர்களா” என்று கேட்டார்.

“ஆமாம்” என்றார் அவர்.

அந்த உபகாரியோ, “இந்த ஊர் வாழ்ந்தால் தான் நான் வாழ்வேன். ஆகையால் இந்த ஊரில் வாழும் எல்லோரையுமே வாழ்த்துங்கள்” என்றார்.

“உங்கள் விருப்பப்படியே செய்கிறேன்” என்றார் ஔவைப் பிராட்டி.

“அவர்கள் பெரிய செல்வர்கள் என்று சொன்னீர்கள். உங்களுக்கு அத்தனை செல்வம் இல்லை அல்லவா” என்று ஆர அமர அந்த மூதாட்டியார் கேட்டார்.