பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



8

உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு


இருந்தும் ஆற்றிய பணிகளைப் பற்றி ஈண்டு எடுத்துக் கூறுவது வேண்டற்பாலதே. சென்னையில் 22-4-44-இல் சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற புறநானூறு மாநாட்டில் புறநானூறு காட்டும் தமிழ்நாகரிகம் என்னுந் தலைப்பில் கட்டுரை எழுதி வழங்கிப் பேசியதும், நெல்லையில் 9-2-1952-இல் டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் நடந்த பத்துப்பாட்டு மாநாட்டில் 'திருமுருகாற்றுப்படை' பற்றிக் கட்டுரை எழுதித் தந்து பேசியதும், நெல்லையிலே 12-2-1956-இல் நடைபெற்ற பதினெண் கீழ்க்கணக்கு மாநாட்டிற்குத் தலைமையுரை எழுதி வழங்கித் தலைமை தாங்கிச் சிறப்பித்ததும் போற்றி மகிழ்தற்குரியன. சென்னையில் 1961 ஆகத்துத் திங்களில் வெளியிட்ட கழகத்தின் 1008-ஆவது வெளியீட்டு விழா மலருக்கு எழுதிய 'திருவாமாத்தூர் யானை' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையும் 1968-இல் அக்டோபர்த் திங்களில் வெளியிட்ட திருவள்ளுவர் விழா மலருக்கு எழுதிய வள்ளுவர் காட்டும் சமயக் கருத்துகள் என்ற கட்டுரையும், 'எத்தனை நூல் கற்றாலும், எப்பொருளை ஆய்ந்தாலும்' என்ற வெண்பாவும் 1970 திசம்பரில் வெளியிட்ட கழகப் பொன்விழாமலருக்கு எழுதிய 'கழகத் தமிழ்ப் பயிர்' என்ற கவிதையும் என்றும் நின்று நிலவுதற்குரியன. நெல்லை தருமபுர மடத்தில் 1952 மே திங்களில் 21 நாள்கள், தொடர்ந்து சிவஞானபோத பாட வகுப்பு நடைபெற்றது. பாடம் நடத்தியவர் சாத்தூர் வழக்கறிஞரும் தமிழ்ப் புலவருமாகிய தூ.சு. கந்தசாமி முதலியார் எம்.ஏ. அவர்களாவர். வகுப்பில் ஆசிரியர்களும் மாணவர்களுமாக நாற்பதின்மர் பாடங் கேட்டனர். காலையிற் பாடஞ் சொல்லுதலும், மாலையில் கேள்விகட்கு விடை சொல்லுதலும் இரவு சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுதலுமாக நிகழ்ச்சி அமைக்கப் பெற்றிருந்தது. அறிஞர் ஒளவையவர்கள் சிறப்புச் சொற்பொழிவுக்காக அழைக்கப் பெற்றிருந்தனர். சென்னையில் 25-12-1964-இல் உரைவேந்தர் ஒளவை அவர்கள் தலைமையில் காப்பிய நிறைவு விழா மிகவுஞ் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவிலே பெருமழைப் புலவர் எழுதிய 'நீலகேசி உரை' வெளியிடப் பெற்றது. தலைவரவர்களின் மதிப்புமிக்க மாணவி தமிழ்த் திருவாட்டி இராதா தியாகராசன் அம்மையார் சிலப்பதிகாரம் பற்றி ஆற்றிய சொற் பொழிவினைக் கேட்டவர்கள் விழித்த கண் விழித்தபடியும் மடுத்தசெவிமடுத்தபடியும் தம்மை மறந்து சுவைத்தனர் என்றால்