பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்ப்பொலிவேடு! - 33 பேச்சாளர் பாடம் சொல்லும் திறமை, எழுத்தாற்றல், பேச்சு வன்மை ஆகிய மூன்றும் ஒருவரிடம் ஒருங்கு அமைவது அரிது. இவற்றுள் ஒன்று இருப்பவரிடம் ஏனை இரண்டும் இருப்பதில்லை. ஆனால் பிள்ளையவர்களிடம் இம் முத்திறனும் ஒருசேர முழுமையாக அமைந்திருந்தன. பேச்சு வன்மை ஒரு கலை; பெறுதற்கரிய கலை. அது பிள்ளையவர்களுக்குப் பிறவிப் பேறாக வாய்ந்தது. இவர் விவேகானந்தரை முன் மாதிரியாகக் கொண்டு தம் பேச்சுத் திறனைப் பேணி வளர்த்துக் கொண்டவர். நேரம் வாய்க்கும் பொழுதெல்லாம் விவேகானந்தரின் ஆங்கிலச் சொற் பொழிவுகளை ஆழ்ந்து படிப்பார். சிறந்த பேச்சாளராக விரும்புவோர் விவேகானந்தரின் உரைகளைப் பலமுறை படிக்க வேண்டும் என்ற அவர் தம்மாணவர்கட்குக் கூறுவதுண்டு. கவர்ச்சியான தோற்றம், அவைக்கு அஞ்சாத துணிவு, எடுப்பான இனிய குரல், சீரிய செந்தமிழ் நடை, திருத்தமான உச்சரிப்பு, சிந்தனைத் தெளிவு, நினைவாற்றல், சொல்லழுத்தம், தட்டுத் தடையின்றித் தொட்டுத் தொடரும் பேச்சோட்டம் ஆகிய பேச்சாளர்க்கு இன்றியமையாத அமைதிகள் அனைத்தும் பிள்ளையவர்களிடம் இயல்பாகவே இனிது அமைந்தன. பேச்சுக்குரிய பொருள் இலக்கியம். இலக்கணம், சமயம் ஆகியவற்றுள் எதுவாயினும் அது பற்றிய செய்திகளையும் கருத்துகளையும் வரையறுத்து, வகைப்படுத்தி, முன்பின் முரணாது-காரண காரியத் தொடர்பமைய நிரல்படத் தொடுத்து, பொருத்தமான மேற்கோள்களோடு வருத்தமின்றி விளக்கி, அவையோர் அருமை 'அருமை என்று பெருமை பேசுமாறு உரையாற்றும் திறமை பிள்ளையவர்களின் தனியுரிமையாகும். சமயச் சொற்பொழிவுகளில் அவருடைய சிந்தனைத் தெளிவையும் சாத்திரத் தேர்ச்சியையும் காணலாம். இலக்கணச் சொற்பொழிவுகளில் நுண்மாண் நுழைபுலத்தையும் ஆய்வுத்திறனையும் அறியலாம். இலக்கியச் சொற்பொழிவுகளில் ஆழ்ந்தகன்ற நூலறிவையும், நயம் கண்டு சுவைக்கும் பண்பு நலத்தையும் உணர்ந்து இன்புறலாம். இலக்கியங்களும் சிறப்பாகக் கம்பராமாயணப் பகுதிகள் பற்றிக் கற்றோர் இதயம் களிக்குமாறு உரையாற்றுவதால் பிள்ளையவர்களுக்கு இணை பிள்ளையவர்களே. பேச எடுத்துக்கொண்ட பகுதியை நாடகக் காட்சியாக அமைத்து, அதற்குரிய பாத்திரங்களை அவையோர் மன அரங்கிலே மாறி மாறி வந்து நடிக்கச் செய்து அவர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்தும் அற்புத ஆற்றலைப் பிள்ளையவர்கள் பாலன்றிப் பிறரிடம் காண்பதரிது. கால் பணத்திலே கல்யாணம், அதிலே கொஞ்சம் வாணவேடிக்கை'