பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



42 . நல்வழிச் சிறுகதைகள்

அச்சிறுவன் பதில் கூறட்டும். பின்னர் அவன் கேட்கும் மூன்று கேள்விகட்கு நான் பதில் சொல்கிறேன். இப்பதில்களைக் கொண்டு வெற்றி தோல்வியை முடிவு கட்டலாம்.”

இவ்வாறு கூறிவிட்டு,அரிசங்கரர் மதிவாணனை நோக்கிக் கேள்விகள் கேட்டார். அவன் அவர் கேள்விகட்குச் சட்டுச் சட்டென்று பதில் கூறினான்.

“இந்த உலகத்தை விடப் பெரியது எது?” என்றார், அரிசங்கரர்.

“உலகத்தைச் சூழ்ந்திருக்கும் வானம்!” என்றான், மதிவாணன்.

தத்துவ நோக்கத்தோடு கேள்வி கேட்ட அரிசங்கரர் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது தவறான பதிலென்று சொல்ல முடியவில்லை.

“மனிதனைச் சிறப்புப்படுத்துவன இரண்டு. அவை என்ன?” என்று கேட்டார் அரிசங்கரர்.

‘மதி நுட்பம்; மன அடக்கம்!” என்று பதிலளித்தான் மதிவாணன்.

சமய நூல் கருத்துக்களின்படி பதில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார் அரிசங்கரர். ஆனால், மதிவாணனுடைய பதிலை அவரால் மறுத்துரைக்க முடியவில்லை.